
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற்ற 8வது லீக் போட்டியில் இங்கிலாந்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இப்ராஹிம் ஜாட்ரான் சதத்தை அடித்து 177 ரன்கள் குவித்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக உலக சாதனை படைத்தார்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக களம் இறங்கிய இங்கிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் ஆப்கானிஸ்தானின் போராட்டமான பந்து வீச்சில் 49.5 ஓவரில் 317 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஓமர்சாய் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. சமீப காலங்களில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் அபார வளர்ச்சி கண்டு வருவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அத்துடன் இந்தத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த அந்த அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது.
மறுபுறம் வலுவான அணியாக கருதப்படும் இங்கிலாந்து தங்களது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 350 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோற்றது. அந்தக் சூழ்நிலையில் இப்போட்டியில் கொஞ்சம் சிறிய அணியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானிடம் தோற்ற இங்கிலாந்து தலை குனியும் தோல்வியை சந்தித்தது. அதனால் இந்தத் தொடரிலிருந்து இங்கிலாந்து பரிதாபமாக வெளியேறியது.
முன்னதாக சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் முதல் 2 போட்டிகளில் தோற்ற இங்கிலாந்து 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட் வாஸ் தோல்வியை சந்தித்தாலும் கவலைப்பட மாட்டோம் என்று அந்த அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்தார். ஏனெனில் இந்தியாவையே சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் தோற்கடிக்கும் அளவுக்கு தங்களிடம் திறமை இருப்பதாக அவர் துச்சமாக பேசினார்.
இதையும் படிங்க: 8 ரன்ஸ்.. கோலி போல் ஃபினிஷிங் செய்யாத ரூட்.. இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்பிய ஆப்கன்.. சரித்திர வெற்றி
கடைசியில் அவர் கேட்டது போலவே 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு ஒயிட் வாஸ் தோல்வியை இந்தியா பார்சல் கட்டியது. ஆனால் அப்படி வாய் நிறைய பேசிய இங்கிலாந்து இங்கே ஆப்கானிஸ்தானிடம் தோற்று சாம்பியன்ஸ் ட்ராபி செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் என்ன தம்பி என்னாச்சு? ஃபைனலில் எங்களுடன் மோதுவதற்கு வரவில்லையா? என்று பென் டக்கெட் மற்றும் இங்கிலாந்து அணியை இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.