வாக்கா’ல மோதி பாக்கலாம் வரீங்களா? இந்தியாவுக்கு இப்போதே அறைக்கூவல் விடுத்த லோக்கல் ஆஸி வீரர் – ரசிகர்கள் மாஸ் பதிலடி

Ashwin
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. இத்தொடரில் 3 போட்டிகளில் வென்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்லும் முனைப்புடன் இந்தியா விளையாடுகிறது. ஆனால் பொதுவாகவே ஸ்லெட்ஜிங் செய்து வெற்றி பெறுவதற்கு பெயர் போன ஆஸ்திரேலியர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே மைதானங்களை பற்றி விமர்சித்து இந்தியாவை வம்பிழுக்க துவங்கினர்.

குறிப்பாக 2017 இந்திய சுற்றுப்பயணத்தில் பயிற்சி போட்டிகளுக்கு பச்சை புற்கள் நிறைந்த பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் முதன்மை போட்டிகளில் சுழலுக்கு சாதகமான பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அதை முன்னாள் வீரர் இயன் ஹீலியும் சேர்ந்து விமர்சித்த நிலையில் முதல் போட்டி நடைபெறும் நாக்பூரில் தங்களது அணியில் இருக்கும் 6 இடது கை பேட்ஸ்மேன்களை இடது கை ஸ்பின்னர்களை வைத்து தாக்குவதற்காக வேண்டுமென்றே இரு புறங்களின் வலது பக்கத்தில் காய்ந்த தன்மையுடன் பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

வாக்கா’வுக்கு வாரீங்களா:
அதனால் நியாயமின்றி வெற்றி பெறுவதற்காக இந்தியா வேண்டுமென்றே பிட்ச்சை உருவாக்கியதாக ஜேசன் கில்லஸ்பி போன்ற முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் ஊடகங்களும் வசை பாடி வருகின்றன. அதற்கு கடந்த மாதம் காபாவில் 1.4 மி.மீ பச்சை புற்களுடன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சை உருவாக்கி தென்னாப்பிரிக்காவை 2 நாட்களில் தோற்கடித்த நீங்கள் இந்தியாவில் இருக்கும் பிட்ச்களை பற்றி பேசலாமா? என சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் இந்திய ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் அடுத்த முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா வரும் போது அனைத்து 5 டெஸ்ட் போட்டிகளையும் வாக்கா மைதானத்தில் நடத்த வேண்டும் என்று அந்நாட்டு வீரர் டிம் லுட்மேன் அறைகூவல் விடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது இந்த ஒட்டு மொத்த உலகிலேயே மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருக்கும் வாக்கா மைதானத்தில் தான் அதிகப்படியான பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும். அதனால் பேட்ஸ்மேன்கள் திண்டாடி நிலையில் ஒரு கட்டத்தில் உயிருக்கு ஆபத்தான பவுன்ஸ் உருவானதால் அந்த மைதானத்தை மூடிய ஆஸ்திரேலிய வாரியம் அருகிலேயே ஆப்டஸ் மைதானத்தை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

இருப்பினும் தற்போது வாக்கா மைதானத்தில் உள்ளூர் போட்டியில் மட்டும் நடைபெற்று வருகிறது. அந்த நிலையில் வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானத்தை உருவாக்கிய இந்தியா அதிகப்படியான பவுன்ஸ் கொண்ட வாக்கா மைதானத்திற்கு வந்து ஆஸ்திரேலியாவுடன் மோத முடியுமா? என்று சவால் விடுக்கும் வகையில் டிம் லுட்மேன் தெரிவித்துள்ளார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் தாராளமாக வருகிறோம் ஆனால் அதற்கு முன் கடைசியாக உங்களது ஊரில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் காபாவுக்கு வருமாறு சொன்ன உங்களது கேப்டன் டிம் பைன் நிலைமையை யோசிக்குமாறு பதிலடி கொடுக்கிறார்கள்.

அதாவது 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா 2வது போட்டியில் போராடி வென்று தொடரை சமன் செய்த நிலையில் சிட்னியில் நடைபெற்ற 3வது போட்டியில் தோல்வியை தவிர்க்க போராடியது. அப்போது காயமடைந்த விஹாரியுடன் இணைந்து தோல்வியை தவிர்க்க போராடிய ரவிச்சந்திரன் அஷ்வினை “அடுத்த போட்டி நடைபெறும் காபாவுக்கு வாருங்கள் மோதிப் பார்ப்போம்” என்று டிம் பைன் ஸ்லெட்ஜிங் செய்தார்.

- Advertisement -

அதற்கு இந்தியாவுக்கு நீங்கள் ஒருமுறை வாருங்கள் அதுவே உங்களது கேரியரின் கடைசி தொடராக இருக்கும் என்று அஸ்வின் பதிலடி கொடுத்தார். தற்போது இந்தியா வராமலேயே டிம் பைன் கேரியர் முடிந்தது வேறு கதை. ஆனால் 32 வருடமாக தோற்காமல் வெற்றி நடை போட்டு வந்த கர்வத்தால் காபாவுக்கு வாருங்கள் என்று அறைகூவல் விடுத்த டிம் பைன் தலைமையிலான ஆஸ்திரேலியா கடைசியில் ரிஷப் பண்ட், கில், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், தாகூர் போன்ற அனுபவமற்ற இளம் வீரர்களின் ஆட்டத்திற்கு பதில் சொல்ல முடியாமல் பரிதாபமாக தோற்றது.

இதையும் படிங்க: சூரியகுமார் யாதவிற்கு அறிமுக வாய்ப்பினை வழங்கியது ஏன்? போட்டிக்கு முன்னரே விளக்கத்தை சொன்ன – ரோஹித் சர்மா

அதனால் காபா கோட்டையை தகர்த்து மூவரண கொடியை பறக்க விட்டு 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா வென்றதை மறந்து விடாதீர்கள் என்று இதுவரை உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள டிம் லுட்மேனுக்கு இந்திய ரசிகர்கள் மாஸ் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement