IND vs PAK : வாயிலேயே வெற்றிபெற முயற்சித்த பாக் வீரர், தேவையற்ற அலப்பறைகளால் கடுப்பாகி கலாய்க்கும் ரசிகர்கள் – நடந்தது இதோ

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கியுள்ள ஆசிய கோப்பை 2022 தொடரின் 2வது லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று துபாயில் கடைசி ஓவர் வரை அனல் பறந்த அந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா அதே மைதானத்தில் கடந்த வருடம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக தங்களுக்கு அவமான தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

பாபர் அசாம் 10, பகார் ஜமான் 10, இப்திகர் அஹமத் 28 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக பொறுப்புடன் விளையாடிய தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 43 (42) ரன்கள் எடுத்தார். மேலும் கடைசி நேரத்தில் ஹரிஷ் ரவூப் 13* (7) தஹானி 16 (6) என டெயில் எண்டர்கள் மானத்தை காத்த முக்கிய ரன்களை எடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 147 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர் கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அசத்தல் வெற்றி:
இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு தங்களது அனுபவத்தை காட்டி 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த கேப்டன் ரோகித் சர்மா 12 (18) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் விராட் கோலி 35 (29) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த சூர்யகுமார் யாதவ் 18 (18) ரன்களில் அவுட்டானதால் 89/4 என தடுமாறிய இந்தியாவுக்கு ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் பாண்டியாவும் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தனர்.

அதில் கடைசி நேரத்தில் ஜடேஜா 2 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (29) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 33* (17) ரன்கள் விளாசி திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்த வெற்றியால் குரூப் ஏ பிரிவில் முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா இந்த ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

- Advertisement -

தேவையற்ற அலப்பறைகள்:
மறுபுறம் சாகின் அப்ரிடி இல்லாமல் போனாலும் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் பந்துவீச்சில் ஆரம்பம் முதலே போராடும் வகையில் செயல்பட்ட பாகிஸ்தான் கடைசி ஓவர் வரை இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தங்களை கொடுத்து வெற்றிக்காக போராடியது பாராட்டுகளைப் பெற்றது. கூடுதலாக இன்னும் 20 – 30 ரன்களை அடித்திருந்தால் நிச்சயமாக அந்த அணி வெல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

மேலும் டாஸ் அதிர்ஷ்டமும் அந்த அணிக்கு கொடுக்காமல் போனது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. அந்த நிலைமையில் பேட்டிங்கில் 43 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முஹம்மது ரிஸ்வான் அதற்காக பீல்டிங் செய்யும் போது செய்த ரகளைகள் போட்டியை பார்த்த அத்தனை இந்திய ரசிகர்களையும் கடுப்பாக வைத்தது.

பொதுவாக விக்கெட் கீப்பர்கள் என்றாலே ஸ்டம்ப்களுக்கு பின்புறம் நின்று எஞ்சிய வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஏதாவது பேசிக்கொண்டே பந்துவீச்சாளர்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளைக் கொடுத்து கொண்டிருப்பதே வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் வெற்றி பெறுவதற்கு அந்த யுக்தியை கையாளாத அவர் இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்க தவறினாலே அது அவுட் என்பது போல் நிறைய பந்துகளில் அம்பயரிடம் வேண்டுமென்றே அவுட் கேட்டுக் கொண்டே இருந்தார்.

அதை பார்க்கும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கூட அது அவுட்டில்லை என்று தெளிவாக தெரியும் போது கிட்டத்தட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் தவறவிடும் அனைத்து பந்துகளிலும் அவர் அவுட் கேட்டதை பார்த்த இந்திய ரசிகர்கள் வாயிலேயே வெற்றி பெற முயற்சிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் விதவிதமாக கலாய்க்கின்றனர். குறிப்பாக ஒரு கட்டத்தில் அவரது சத்தத்தால் கடுப்பான ஹர்திக் பாண்டியாவே அவரை அவுட் கேட்க விடாமல் நட்பு ரீதியாக அவர் மீது கையை போட்டு தடுத்து நிறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் முன்னாள் இந்திய வீரர் அமித் மிஷ்ராவும் அவரது செயலுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement