கிங் கோலி பெயர் நியாபகம் இருக்கா? வெற்றி மிதப்பில் பேசிய மைக்கேல் வாகனுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி – நடந்தது என்ன?

- Advertisement -

பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து டிசம்பர் 1ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் அசாத்தியமான வெற்றியை பெற்றது. குறிப்பாக தார் ரோட் போல் இருந்த ராவல்பிண்டி பிட்ச்சை பயன்படுத்தி முதல் இன்னிங்ஸில் 657 ரன்களை அடித்து நொறுக்கி உலக சாதனைகளை படைத்த இங்கிலாந்து பாகிஸ்தானை அதனுடைய முதல் இன்னிங்ஸில் போராடி 579 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அதனால் 78 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து 264/7 ரன்கள் எடுத்திருந்த போது தைரியமாக டிக்ளேர் செய்து பின்னர் பாகிஸ்தானை 268 ரன்களுக்கு சுருட்டியது.

இப்போட்டியில் ஆரம்ப முதலே இங்கிலாந்து அதிரடியாக விளையாடிய நிலையில் ஆரம்ப முதலே ஆமை வேகத்தில் பாகிஸ்தான் விளையாடியது வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அதை விட ஒன்றரை நாட்கள் மீதமிருந்ததால் தார்ட் ரோட் போன்ற பிட்ச்சில் 343 ரன்களை போராடினால் எட்டி விடலாம் என்ற நிலைமையில் ரிஸ்க் எடுத்து தன்னுடைய 2வது இன்னிங்ஸை சரியான நேரத்தில் டிக்ளர் செய்த இங்கிலாந்து தைரியமாக கடைசி நாளில் அதிரடியான அணுகு முறையுடன் விளையாடி வெற்றி கண்டது அனைவரது பாராட்டுக்கள் பெற்று வருகிறது.

- Advertisement -

கிங் கோலி தெரியுமா:
முன்னதாக ஜோ ரூட் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் ரொம்பவே தடுமாறிய இங்கிலாந்து புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் சமீப காலங்களில் இந்தியா, நியூசிலாந்து போன்ற அணிகளை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி வெற்றி நடை போட்டு வருகிறது. ஆரம்பத்தில் சொந்த மண்ணில் மட்டுமே அசத்திய அந்த அணி வெளிநாடுகளில் அதே அணுகு முறையால் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அதையும் சாதித்து காட்டியுள்ள இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றி வரலாற்றில் மிகச்சிறந்த வெற்றிகளில் ஒன்று என்று பாராட்டும் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இப்போட்டியில் தனது அணியை அதிரடியாக பேட்டிங் செய்ய வைத்தது மற்றும் முக்கிய நேரத்தில் டிக்ளேர் செய்தது போன்ற பென் ஸ்டோக்ஸ் எடுத்த தைரியமான முடிவுகளை வரலாற்றில் வேறு எந்த கேப்டனும் எடுத்திருக்க மாட்டார்கள் என்று ட்விட்டரில் பாராட்டினார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் கிங் கோலி என்ற பெயர் நினைவிருக்கிறதா என்று அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

ஏனெனில் 2014இல் கேப்டனாக பொறுப்பேற்ற போது தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தனது ஆக்ரோஷமான கேப்டன்சிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக வலம் வர வைத்த விராட் கோலி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகள் பெற்றுக் கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான ஆசிய கேப்டனாக சாதனை படைத்தார்.

மேலும் தற்போது டெஸ்ட் போட்டிகளில் ட்ரா செய்யும் எண்ணம் எங்களுக்கு கனவிலும் இல்லை என்று வெற்றிக்குப் பின் பென் ஸ்டோக்ஸ் பேசியிருந்தார். ஆனால் 2014இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் தோல்வி கிடைத்தாலும் பரவாயில்லை டிரா செய்யக்கூடாது என்ற எண்ணத்துடன் 400+ இலக்கை சேசிங் செய்யும் முடிவை இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே எடுத்த விராட் கோலி டெஸ்ட் போட்டியை ட்ரா செய்வது எதிர்மறையான அணுகு முறை என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அதை மைக்கேல் வாகனுக்கு சுட்டிக்காட்டும் இந்திய ரசிகர்கள் 2021இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி 60 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் சாய்த்து உங்களை சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைக்கும் அளவுக்கு சரியான நேரத்தில் இந்தியாவின் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த விராட் கோலியின் தைரியமான முடிவை நீங்கள் மறந்து விட்டீர்களா? என்றும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : மேஜிக் கேப்டன்ஷிப் எல்லாம் அந்த தொடரில் மட்டும் தானா? ரோஹித்தை விளாசும் முகமது கைஃப் – பேசியது என்ன?

அதனால் உங்களது கேப்டனை பாராட்டுங்கள் ஆனால் அதற்காக ஒட்டுமொத்த வரலாற்றில் பென் ஸ்டோக்ஸ் போல் எந்த கேப்டனுமே செயல்பட்டதில்லை என்று வெற்றி மமதையில் கண்மூடித்தனமாக பேசாதீர்கள் என்று மைக்கேல் வாகனுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement