இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மிரட்டலாக செயல்பட்ட தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 17ஆம் தேதி உலக புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்த தென் ஆப்பிரிக்கா ஜோ ரூட் 8, ஜானி பேர்ஸ்டோ 0, பென் ஸ்டோக்ஸ் 20 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி வெறும் 165 ரன்களுக்கு சுருட்டியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஓலி போப் 73 ரன்கள் குவிக்க அனலாக பந்துவீசிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு போராடி 326 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் டீன் எல்கர் 47, எர்வீ 73 ரன்கள், கேஷவ் மஹராஜ் 41, மார்கோ யான்சென் 48 ரன்கள் எடுத்தனர்.
தென்ஆப்பிரிக்கா மாஸ்:
அதைத் தொடர்ந்து 161 ரன்கள் பின்தங்கிய நிலையில் அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து 2வது இன்னிங்சில் மேலும் அனலாக பந்துவீசிய தென்னாப்பிரிக்காவுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 149 ரன்களுக்குச் சுருண்டது. ஜோ ரூட் 6, பென் ஸ்டோக்ஸ் 20, ஜானி பேர்ஸ்டோ 18 என அந்த அணியின் முக்கிய வீரர்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி சொந்த மண்ணில் தலைகுனியும் படுதோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.
இந்த வெற்றிக்கு மொத்தமாக 7 விக்கெட் எடுத்த ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட நிலையில் 1 – 0* (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் ஆகியோரது தலைமையில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் வைட்வாஷ் செய்த இங்கிலாந்து ரோகித் சர்மா இல்லாத பும்ரா தலைமையிலான இந்தியாவையும் 378 ரன்களை அசால்ட்டாக சேஸிங் செய்து தோற்கடித்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
கலாய்க்கும் ரசிகர்கள்:
“பஸ்பால்” எனும் பெயருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி இந்த அசால்ட்டான வெற்றிகளைப் பெற்ற இங்கிலாந்து அதே அதிரடி ஆயுதத்தால் தென் ஆப்பிரிக்காவையும் தோற்கடிக்கும் என்று அந்நாட்டு ரசிகர்கள் முன்னாள் வீரர்களும் இப்போட்டிக்கு முன்பாக கூறினார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து நேரங்களிலும் அதிரடியாக செயல்பட்டு வெற்றி பெற முடியாது என்பதற்கு சான்றாக இப்போட்டியில் சொந்த மண்ணில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த இங்கிலாந்தை “பஸ்பால் என்பது வெறும் புஸ்வானம்” என்று பெரும்பாலான ரசிகர்க்கும் வாசிம் ஜாபர் போன்ற சில முன்னாள் வீரர்களும் கலாய்க்கின்றனர்.
அதிலும் ரோகித் சர்மா இல்லாத இந்தியாவை தோற்கடித்த விட்டு என்னமோ தொடரை வென்றது போல் இந்த உலகிற்கே டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப் போவதாக பேட்டி கொடுத்த பென் ஸ்டோக்ஸை இந்திய ரசிகர்கள் கலாய்க்கின்றனர். ஆனால் வரவிருக்கும் ஆபத்தை உணராமல் இந்திய ரசிகர்கள் தென்னாப்பிரிக்காவின் வெற்றியை கொண்டாடுகிறார்கள் என்பதே உண்மையாகும்.
காத்திருக்கும் ஆபத்து:
ஏனெனில் இந்த வெற்றிக்கு பின் 2021 – 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா 75% புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில் ஆஸ்திரேலியா (70%) உள்ளது. இந்தியா 52.08% புள்ளிகளுடன் 4-வது இடத்தில் தள்ளாடுகிறது. ஆனால் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலமையில் இந்தியா குறைந்தபட்சம் 2வது இடத்தைப் பிடிப்பதற்கு 8வது இடத்தில் திண்டாடும் இங்கிலாந்து அடுத்து வரும் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் வரும் நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டியிலும் வரும் பிப்ரவரியில் தன்னுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கும் இந்தியா அந்த 6 போட்டிகளையும் வென்றால் மட்டுமே பைனலுக்கு தகுதி பெற முடியும். ஏதேனும் ஒரு போட்டி டிராவில் முடிந்தால் கூட முதலிரண்டு இடங்களை பிடிப்பது கடினமாகிவிடும்.
இதையும் படிங்க: IND vs ZIM : உங்களை தொடலாமா, ஜிம்பாப்வே ரசிகை மீது தீபக் சஹர் காட்டிய அன்பு – ரசிகர்கள் பாராட்டும் வீடியோ உள்ளே
அத்துடன் அந்த 6 போட்டிகளில் வென்றாலும் கூட வரும் ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா பங்கேற்கும் 3 போட்டிகளிலும் 3 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றால் தான் இந்தியா முதலிரண்டு இடங்களை பிடிக்க முடியும். அந்த தொடரில் ஒரு போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றால் கூட இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்வது கடினமாகிவிடும். இப்படி பல அம்சங்கள் இந்தியாவிற்கு எதிராகவே இருப்பதால் இம்முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா என்ற கவலை இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.



