ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்ட இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 189 ரன்களுக்கு சுருண்டது. சிக்கந்தர் ராசா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சகப்வா 35 ரன்களை எடுத்தார்.
இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக தீபக் சஹர், அக்சர் பட்டேல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து 190 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு எதிராக சுமாராக பந்துவீசிய ஜிம்பாப்வே பவுலர்களை கடைசி வரை அவுட்டாகாமல் அடித்து நொறுக்கிய தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் 81* ரன்களும் சுப்மன் கில் 82* ரன்களும் குவித்து எளிதான வெற்றி பெற வைத்தனர்.
சஹர் கம்பேக்:
அந்த வெற்றிக்கு ஆரம்பத்திலேயே அட்டகாசமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய தீபக் சஹார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அசத்திய அவர் கடந்த 2018இல் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி கடந்த 2019இல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலர் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற இரட்டை சாதனைகளை படைத்தார். அதனால் டி20 உலகக்கோப்பையில் விளையாடும் முக்கிய பந்துவீச்சாளராக உருவெடுத்த அவர் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் 14 கோடிக்கு சென்னைக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் துரதிஸ்டவசமாக காயத்தால் வெளியேறினார்.
அவர் இல்லாததால் பெரிய பின்னடைவை சந்தித்த சென்னை வரலாற்றில் முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்தது. அந்த நிலையில் 6 மாதங்கள் காயத்திலிருந்து குணமடைந்து தற்போது திரும்பியுள்ள அவர் முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்று சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார். இருப்பினும் அடுத்ததாக நடைபெறும் ஆசிய உலக கோப்பையில் ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே இடம் பிடித்துள்ள அவருக்கு டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு மந்தமாகவே காணப்படுகிறது.
நெகிழ்ந்த ரசிகை:
அந்த நிலைமையில் நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடிய தீபக் சஹர் முதல் போட்டி முடிந்ததும் தமக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களை மைதானத்தின் தடுப்புச் சுவரின் அருகே சென்று நேரடியாக சந்தித்து மகிழ்ந்தார். இந்திய ரசிகர்களைப் போலவே அவரை பார்ப்பதற்கு ஜிம்பாப்வே ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் அருகில் வந்தார்கள். மேலும் போட்டி நடந்த ஹராரே மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜிம்பாப்பே வீரர்களின் குடும்ப உறுப்பினர்களையும் தீபக் சஹர் நேரில் சந்தித்து அன்புடன் பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது ஒரு ஜிம்பாப்வே ரசிகை தீபக் சஹரை பார்த்து பூரித்து போய் அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள விரும்பினார். ஆனால் கருப்பாக இருக்கும் தம்முடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள தீபக் சஹர் விரும்புவாரா என்ற தயக்கத்துடன் அவரது அருகே சென்ற அவர் “உங்களை தொட்டு பார்கலாமா” என்று தயங்கிக் கொண்டே கேட்டார். அதற்கு கொஞ்சமும் முகம் சுளிக்காத தீபக் சாஹர் சிரித்த முகத்துடன் தனது தோள் மீது கை போடுவதற்கு அனுமதி அளித்தது புன்னகை நிறைந்த செல்பியும் எடுத்து அந்த ரசிகை மீது அன்பை வெளிப்படுத்தினார்.
அதனால் நெகிழ்ச்சி அடைந்த அந்த ரசிகை ஒருசில வினாடிகள் பேச முடியாமல் உணர்ச்சி பொங்க மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். சமீப காலங்களில் கிரிக்கெட்டில் நிறவெறி ஒரு சர்சையாக இருக்கும் நிலையில் அதையெல்லாம் நினைக்காமல் தீபக் சஹார் ஜிம்பாப்வே ரசிகை மீது அன்பு காட்டியது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்திய பத்திரிகையாளர் விமல்குமார் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப்படி ரசிகையை மகிழ்வித்து கம்பேக் கொடுத்துள்ள தீபக் சஹர் ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று துவங்கிய 2வது போட்டியில் திடீரென நீக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை என்னவென்று கேப்டன் கேஎல் ராகுல் தெரிவிக்காததால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். மேலும் அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சில செய்திகள் வெளியாவதால் ராகுல் மீது ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.



