
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரில் நேற்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா தங்களை நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்தது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 232 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக திலக் வர்மா 73, ஹர்திக் பாண்டியா 63 ரன்கள் குவித்தனர். அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்கா கடினமாக போராடியும் 20 ஓவரில் 201/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 65 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதனால் 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா இத்தொடரை வென்றது. இதையும் சேர்த்து 2022 முதல் தங்களது சொந்த மண்ணில் விளையாடிய 9 டி20 இருதரப்பு தொடர்களில் இந்தியா தொடர்ச்சியாக 9வது வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த 9 வெற்றிகள் பின்வருமாறு (எதிரணிகளுக்கு எதிராக). ஆஸ்திரேலியா 2 – 1 (3), தென்னாப்பிரிக்கா 2 – 1 (2), இலங்கை 2 – 1 (3), நியூஸிலாந்து 2 – 1 (3), ஆஸ்திரேலியா 4 – 1 (5), ஆப்கானிஸ்தான் 3 – 0 (3), வங்கதேசம் 3 – 0 (3), இங்கிலாந்து 4 – 1 (5), தென்னாப்பிரிக்கா 3 – 1 (5)*
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக இருதரப்பு தொடர்களை வென்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 2006 – 2010 காலகட்டங்களில் ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் 8 தொடர்ச்சியான இருதரப்பு தொடர்களை வென்றதே முந்தைய சாதனையாகும். அந்தப் பட்டியல்:
1. இந்தியா: 9* (2022 – 2025*)
2. ஆஸ்திரேலியா: 8 (2006 – 2010)
3. இந்தியா: 7 (2019 – 2022)
அந்த 15 வருட சாதனையை இந்தியா தற்போது உடைத்துள்ளது. இதிலிருந்து இந்திய அணி தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றிருந்தது. எனவே டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து தோல்வியை பரிசளித்த தென்னாப்பிரிக்காவுக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: இந்திய அணியின் என்னுடைய ரோல் இதுதான்.. அதை சரியா செய்ததில் மகிழ்ச்சி – தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பேட்டி
இதைத்தொடர்ந்து இந்திய அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரில் விளையாட உள்ளது. அதைத் தொடர்ந்து 2026 டி20 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் லட்சியத்துடன் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.