
அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நடைபெற இருப்பதாக ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்திருந்தது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் எப்போது நடைபெற்றாலும் பொதுவான மைதானங்களில் தான் கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அணி பயணிக்காது என பிசிசிஐ ஏற்கனவே திட்டவட்டமாக ஐசிசி-யிடம் தெரிவித்தது.
அதன் காரணமாக கடந்த பல மாதங்களாகவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடுமா? என்கிற சந்தேகம் இருந்தது. அதேபோன்று இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்காவிட்டால் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதனால் அதற்கான மாற்று திட்டங்களை ஐசிசி தொடர்ச்சியாக ஆலோசித்து வந்தது.
இதன் காரணமாக இந்த விவகாரம் குறித்த பல்வேறு காரசாரமான விவாதங்கள் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணையை வெளியிட்டு இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும் என்ற முடிவினை ஐசிசி எடுத்து இந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அந்த வகையில் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளோடு இந்திய அணி இடம் பிடித்து விளையாட இருக்கிறது.
அதேபோன்று குரூப் பி-யில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாட இருக்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டியானது பிப்ரவரி 19-ஆம் தேதி கராச்சியில் நடைபெறுகிறது மேலும் இந்த தொடரின் இறுதிப் போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விராட் கோலி, பும்ரா மட்டும் இங்க வந்தா போதும்.. அப்புறம் நடக்குறத பாருங்க – ஆலன் டொனால்டு பாராட்டு
இந்திய அணி விளையாடும் 4 போட்டிகள் அனைத்தும் துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதேபோன்று ஒருவேளை இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில் இறுதிப்போட்டியும் துபாயில் நடைபெறும் என்றும் அப்படி இல்லை என்றால் அந்த போட்டி லாகூரில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.