அவர் மட்டும் ஃபிட்டாகி விளையாடலைனா 2023 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்வி கன்ஃபார்ம் – முகமது கைப் கவலை

Mohammed kaif
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்க உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களது சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஸ் ஃபைனல் உட்பட முக்கிய போட்டிகளில் சுமாராக செயல்படுவது அஸ்வின் போன்ற சரியான வீரர்களை தேர்வு செய்யாதது போன்ற சமீப காலங்களில் சொதப்பல்களில் எந்த பாடத்தையும் கற்காத இந்தியா மீண்டும் அதே தவறை செய்து வருகிறது.

போதாகுறைக்கு ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற முதன்மை வீரர்கள் காயத்திலிருந்து இன்னும் குணமடையாமல் இருந்து வருவதும் இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கருப்பு குதிரையாகவும் முதன்மை பவுலராகவும் கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா இன்னும் முழுமையாக குணமடையாமல் இருந்து வருவது பந்து வீச்சு துறையில் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தோல்வி கன்ஃபார்ம்:
ஏனெனில் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ள அவர் பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை போட்டியின் எந்த நேரத்திலும் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய துருப்புச்சீட்டாக போற்றப்படுகிறார். அதனாலேயே 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையுடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் அவர் விளையாடாதது இந்தியாவின் தோல்விக்கு மறைமுக காரணமாக அமைந்தது. இருப்பினும் தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் சுமார் ஒரு வருடம் கழித்து விரைவில் துவங்கும் அயர்லாந்து டி20 தொடரில் கிரிக்கெட் கேப்டனாக களமிறங்குவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில் பும்ரா விளையாடாமல் போனால் நிச்சயமாக 2023 உலக கோப்பையை இந்தியா வெல்வது மிகவும் கடினம் என்று முன்னாள் வீரர் முஹமது கைஃப் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவின் வெற்றி காயமடைந்துள்ள வீரர்களின் நிலைமையை பொறுத்து அமையும். குறிப்பாக பும்ரா முழுமையாக ஃபிட்டாகி வந்தால் அதுவே இந்தியாவின் வெற்றிக்கான சாவியாக இருக்கும். தற்போதைய நிலைமையில் அவருடைய முழுமையான ஃபிட்னஸ் பற்றி ஆசிய கோப்பையில் தான் தெரியும்”

- Advertisement -

“மேலும் தற்போது அயர்லாந்துக்கு செல்லவிருக்கும் அவர் எவ்வாறு பந்து வீசுகிறார் என்பதை நான் பார்க்க உள்ளேன். ஒருவேளை அவர் முழுமையாக ஃபிட்டாகி விளையாடினால் சொந்த மண்ணில் இந்த உலகக் கோப்பையில் இந்தியா மிகவும் வலுவான அணியாக களமிறங்கும். பொதுவாக 50 ஓவர் போட்டிகள் மிகவும் வித்தியாசமானது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த உலக கோப்பை டி20 வடிவமாக நடைபெற்றது. ஆனாலும் அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டது”

“பொதுவாகவே ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக நாம் சிறப்பாக செயல்பட்டு சிறந்த சாதனைகளை வைத்துள்ளோம். இருப்பினும் தற்போதைய நிலைமையில் இந்தியா வலுவான அணியாக இல்லை. ஏனெனில் முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளனர். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருடன் மிகவும் முக்கியமான பும்ரா இல்லை. ஒருவேளை அவர் கம்பேக் கொடுக்கவில்லை என்றால் இந்தியா மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்”

இதையும் படிங்க:உம்ரான் மாலிக்கை விட எவ்ளோவோ பரவால்ல, அவர் 2023 உ.கோ வாய்ப்பை கன்ஃபார்ம் பண்ணிட்டாரு – ஆகாஷ் சோப்ரா பாராட்டு

“ஏனெனில் இன்னும் நம்மிடம் பும்ராவுக்கு சரியான மாற்று வீரர் இல்லை. எனவே அவர் இந்த உலக கோப்பையில் விளையாடாமல் போனால் நாம் தோல்வியை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது. இப்படி உலக கோப்பைக்கு முன்பாக நமது அணியில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயத்தை சந்தித்த பும்ரா 2 முறை குணமடைந்து ஓரிரு போட்டிகளில் விளையாடி மீண்டும் காயமடைந்து கடைசி நேரத்தில் வெளியேறினார். அதே போல இம்முறையும் நடந்து விடக்கூடாது என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement