
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலாவதாக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2022 – 2025 ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் பிசிசிஐ தலைவர் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.
அதைத் தொடர்ந்து 2014க்குப்பின் 10 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் டெஸ்ட் போட்டியில் மோத உள்ளன. இதற்கு முன் 2002 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இந்திய மகளிரணி வெற்றி கண்டது.
சென்னையில் 4 போட்டிகள்:
அதைத் தொடர்ந்து 2025 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளன. இந்நிலையில் இந்த அடுத்தடுத்த தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி முதலாவதாக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முழுவதும் பெங்களூரு நகரில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன் பின் நடைபெற உள்ள ஒரு டெஸ்ட் போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 1976ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய மகளிரணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதைத் தொடர்ந்து இப்போது தான் 48 வருடங்கள் கழித்து இந்திய அணி சென்னையில் விளையாட உள்ளது.
அந்தப் போட்டி முடிந்ததும் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் முழுவதுமாக சென்னையில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்திய மகளிர் அணியின் 4 போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது தமிழக சிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஸ்மிருதி மந்தனா போன்ற நட்சத்திர வீராங்கனைகளின் ஆட்டத்தை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு தமிழக ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் தொடரின் அட்டவணை:
முதல் ஒன்டே : ஜுன் 16 மதியம் 1.30 மணி, பெங்களூரு
2வது ஒன்டே : ஜுன் 19 மதியம் 1.30 மணி, பெங்களூரு
3வது ஒன்டே : ஜுன் 23 மதியம் 1.30 மணி, பெங்களூரு
இதையும் படிங்க: அவங்கள பாத்தாவது நாம திருந்தனும்.. அடுத்த உலகக் கோப்பையில் இதை மாத்துங்க.. ஹர்பஜன் அட்வைஸ்
ஒரு டெஸ்ட் : காலை 9.30 மணி, ஜுன் 28 – ஜூலை 1, சென்னை
முதல் டி20 : இரவு 7 மணி, ஜூலை 5, சென்னை
2வது டி20 : இரவு 7 மணி, ஜூலை 7, சென்னை
3வது டி20 : இரவு 7 மணி, ஜூலை 9 சென்னை