
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே ஜூலை 23ஆம் நடைபெறும் 4வது போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா தயாராக உள்ளது.
அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்தப் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருக்கும் ஓல்ட் ஃட்ராபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. 1857ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த பழமையான மைதானம் 19000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த மைதானத்தில் 1884ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மைதானத்தில் 84 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து 33 வெற்றி 15 தோல்வி 36 டிராவை பதிவு செய்துள்ளது. மறுபுறம் இந்திய அணி இங்கே விளையாடிய 9 போட்டிகளில் 4 தோல்வி 5 டிராவை சந்தித்துள்ளது. இங்கிலாந்தின் மற்றொரு கோட்டையாக கருதப்படும் இந்த மைதானத்தில் ஒருமுறை கூட இந்தியா வென்றதில்லை. அதே போல 1990ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கருக்கு பின் இம்மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் சதத்தை அடித்ததில்லை.
மான்செஸ்டர் நகரில் இப்போட்டி நடைபெறும் 5 நாட்களும் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என்று அங்குள்ள வானிலை மையத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது. 5 நாட்களுமே 10 – 30% அளவுக்கு லேசான மழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் அதுவே இங்கிலாந்தில் நிலவும் பொதுவான வானிலை என்பதால் இப்போட்டி லேசானத் தடைகளை தாண்டி முடிவு கிடைக்கும் அளவுக்கு நடைபெறும் என்று நம்பலாம்.
ஓல்ட் ட்ராபோர்ட் பிட்ச்சில் ஆரம்பக்கட்ட நாட்களில் இருக்கும் வேகம், பவுன்ஸ் ஆகியவையுடன் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்கும். அதைப் பயன்படுத்தி அவர்கள் பந்தை ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலைக் கொடுப்பார்கள். எனவே ஆரம்பகட்ட நாட்களில் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க சூழ்நிலையை உணர்ந்து நங்கூரமாக விளையாடுவது அவசியமாகும்.
இதையும் படிங்க: அஸ்வினுக்கே டஃப் கொடுத்த சுந்தரை கழற்றி விடாதீங்க.. சீக்கிரம் 6வது இடத்துக்கு முன்னேறி வருவாரு.. ரவி சாஸ்திரி
அதே சமயம் பேட்ஸ்மேன்கள் செட்டிலாகி விட்டால் 2, 3, 4வது நாட்களில் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கும். 5வது நாளில் வழக்கம் போல தேய்ந்த, விரிசல் ஏற்பட்ட பிட்ச்சில் ஸ்பின்னர்கள் கணிசமான விக்கெட்டுகளை எடுப்பார்கள். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 331. இங்கேயும் நாட்கள் செல்ல செல்ல பேட்டிங் செய்வது கடினமாகும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.