அஸ்வினுக்கே டஃப் கொடுத்த சுந்தரை கழற்றி விடாதீங்க.. சீக்கிரம் 6வது இடத்துக்கு முன்னேறி வருவாரு.. ரவி சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

ஜூலை 23ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட அத்தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே 4வது போட்டியில் வென்று தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராகி வருகிறது.

அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 5 பவுலர்களுடன் விளையாடுவது அவசியம் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக குல்தீப் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டால் இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால் அவரை தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் ஒன்று ரவீந்திர ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை நீக்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

சுந்தரை நீக்காதீங்க:

இருப்பினும் ரவீந்திர ஜடேஜா கடந்த 4 இன்னிங்சில் அரை சதத்தை அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். வாஷிங்டன் சுந்தர் கடந்தப் போட்டியில் கணிசமான ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் குல்தீப்பை அணிக்குள் கொண்டு வர வேண்டுமெனில் அனுபவம் காரணமாக ஜடேஜாவை விட்டுவிட்டு சுந்தரை கழற்றி விட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2024 நியூசிலாந்து தொடரில் அஸ்வின், ஜடேஜா தடுமாறிய போது வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பவுலிங் செய்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அதே போல 2024 ஆஸ்திரேலியா பெர்த் டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் தேர்வான சுந்தர் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். அப்படி அஸ்வினுக்கு சவாலைக் கொடுத்த சுந்தரை அணியிலிருந்து நீக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

சாஸ்திரி ஆதரவு:

இது பற்றி ஐசிசி இணையத்தில் சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “சுந்தரை நான் எப்போதும் விரும்புகிறேன். அவரை முதல் நாளில் பார்த்த போது இவர் நம்முடைய இந்திய அணிக்கு நீண்ட வருடங்கள் உண்மையான ஆல் ரவுண்டராக இருப்பார் என்று சொன்னேன். 25 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இன்னும் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் பந்து திரும்பும் போது அவர் ஆபத்தானவராக இருப்பார்”

இதையும் படிங்க: ஒரு முக்கிய மாற்றத்துடன் தங்களது பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி – ஸ்ட்ராங்கான டீம் தான்

“கடந்த நியூஸிலாந்து தொடரில் அவர் சில சீனியர் ஸ்பின்னர்களை (அஸ்வின், ஜடேஜா) விட சிறப்பாக பவுலிங் செய்தார். பவுலிங் செய்யும் அளவுக்கு அவரால் நன்றாக பேட்டிங் செய்யவும் முடியும். சுந்தர் இயற்கையாகவே திறமை கொண்ட பேட்ஸ்மேன். தற்போது அவர் உங்களுக்கு 8வது இடத்தில் விளையாடி வருகிறார். ஆனால் விரைவில் அவர் இந்திய பேட்டிங் துறையில் 6வது இடத்தில் விளையாடும் அளவுக்கு முன்னேறுவார்” என்று கூறினார்.

Advertisement