இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 107* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பட்டாசாக விளையாடி 285-9 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 47, கே.எல். ராகுல் 68 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்திற்கு அதிகபட்சமாக தலா மெஹதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்களை சாய்த்தனர். அதை தொடர்ந்து 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் களம் இறங்கி வங்கதேசத்திற்கு ஜாகிர் ஹசன் 10, ஹசன் மஹ்முத் 4, மோனிமுல் ஹைக் 2 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார்கள்.
அஸ்வின் சாதனை:
இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து 2023 – 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அஸ்வின் இதுவரை 10 போட்டிகளில் 50* விக்கெட்டுகளை கடந்துள்ளார். இது போக 2019 – 21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அஸ்வின் 14 போட்டிகளில் 71 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். மேலும் 2021 – 23 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 13 போட்டிகளில் அஸ்வின் 61 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
இதன் வாயிலாக இதுவரை நடைபெற்ற 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் தலா 3 முறை 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த முதல் பவுலர் என்ற தனித்துவமான சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன், பட் கமின்ஸ் மற்றும் நியூசிலாந்தின் டிம் சௌதீ ஆகியோர் 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் தலா 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாகும்.
மிரட்டும் இந்தியா:
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த கேப்டன் சாண்டோ 19 ரன்களில் ஜடேஜா சுழலில் கிளீன் போல்டானார். அதே போல மறுபுறம் அரை சதமடித்து சவாலை கொடுத்த சாத்மன் இஸ்லாம் 50 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் அவுட்டானார். அடுத்ததாக வந்த லிட்டன் தாஸ் 1, ஷாகிப் அல் ஹசன் 0 ரன்களில் ஜடேஜாவின் அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியன் திரும்பினர்.
இதையும் படிங்க: அதுக்கு கூட காசு இல்ல.. வாய்ப்பை பாத்ததும் அம்மா அழுதாங்க.. கம்பீர் பையா சொன்னது நடந்துச்சு.. மயங் யாதவ்
இறுதியில் 37 ரன்கள் குவித்து போராடிய ரஹீமை உணவு இடைவெளிக்கு முந்தைய கடைசி பந்தில் பும்ரா போல்ட்டாக்கினார். அதனால் வங்கதேசத்தை 146 ரன்களுக்கு சுருட்டிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக அஸ்வின், ஜடேஜா, பும்ரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. குறிப்பாக 4வது நாள் மாலையில் ஆட்டத்தை துவங்கிய வங்கதேசத்தை 5வது நாள் மதியத்திற்குள் அரை நாளில் சுருட்டிய இந்தியா டிராவில் முடிவடைய வேண்டிய இப்போட்டியில் வெற்றியை நெருங்கி விட்டது