
ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்புக்கு மத்தியில் மெல்போர்ன் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் அனல் தெறித்த அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பாபர் அசாம், முகமத் ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும் ஷான் மசூட் 52* ரன்களும், இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்ததால் தப்பிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 159/8 ரன்களை சேர்த்தது. இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷிதீப் சிங் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 160 ரன்களை சேசிங் செய்த இந்தியாவிற்கு கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூரியகுமார் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். குறிப்பாக 31/4 என ஆரம்பத்திலேயே திண்டாடிய இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் இணைந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து செங்குத்தாக தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா வெற்றி நோக்கி அழைத்து வந்த போது கடைசி ஓவரில் 40 (37) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் பொறுப்பின்றி ஸ்டம்பிங் ஆகி சென்றதால் ஏற்பட்ட பரபரப்பில் அறிவுபூர்வமாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி பந்தில் முகமது நவாஸ் வீசிய ஒய்ட் வலையில் சிக்காமல் தூக்கி அடித்து இந்தியாவை 20 ஓவர்களில் 160/6 ரன்களை எடுக்க வைத்து வெற்றி பெற வைத்தார்.
உலகசாதனை வெற்றி:
இந்த வெற்றிக்கு கடைசி வரை அவுட்டாகாமல் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் நங்கூரமாக நின்று 82* (53) ரன்களை குவித்து பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியா இந்த உலக கோப்பையை மாஸ் வெற்றியுடன் துவங்கியுள்ளது.
அதிலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகிய 2 முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் எதிரணியில் ஷாஹீன் அப்ரிடி இருந்தும் அபாரமாக செயல்பட்ட இந்தியா இந்த அசாத்தியமான வெற்றியை பதிவு செய்து தீபாவளி பரிசளித்தது ரசிகர்களிடம் புத்துணர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக முன்னேறியுள்ள இந்தியா யானைக்கும் அடி சறுக்கியதை போல் சமீபத்திய ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்வியை தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்துப் போட்டிகளையும் வென்று வீரநடை போட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்றைய வெற்றியும் சேர்த்து டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்த வருடம் மட்டும் 39 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. சமீபத்திய தென் ஆப்பிரிக்க தொடரின் முடிவிலேயே இச்சாதனையை சமன் செய்த இந்தியா தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் அதை முறியடித்துள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். அந்த பட்டியல்:
1. இந்தியா : 39* (2022)
2. ஆஸ்திரேலியா : 38 (2003)
3. இந்தியா : 37 (2017)
அத்துடன் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேஸிங் செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. மேலும் நேற்றைய போட்டியில் கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்ட போது அதை எடுத்து இந்தியாவை வென்றது. டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர்களில் இப்படி 50+ ரன்களை எடுத்து இந்தியா வெற்றி பெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இப்படி அடுத்தடுத்து சாதனைகளுடன் வெற்றி நடை போடும் இந்தியா இந்த உலக கோப்பையில் அடுத்ததாக வரும் அக்டோபர் 27ஆம் தேதியன்று நெதர்லாந்தை நடந்த 2வது போட்டியில் எதிர்கொள்கிறது.