
ஐசிசி 2024 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வருடம் லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவின் தோற்கடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா வீழ்த்தியது. குறிப்பாக கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி கயானா நகரில் நடைபெறும் செமி ஃபைனலில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அப்போட்டியில் வெற்றி பெற்று இந்தியா ஃபைனலுக்கு சென்று கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் கடைசியாக 2007இல் தோனி தலைமையில் கோப்பையை வென்ற இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது.
சேவாக் கோரிக்கை:
இந்நிலையில் 2011 உலகக் கோப்பையை சச்சின் டெண்டுல்கருக்கு வென்று கொடுப்பதற்காகவே தாங்கள் விளையாடியதாக முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர் சேவாக் தெரிவித்துள்ளார். அதே போல தற்போது பயிற்சியாளராக விடைபெறும் ராகுல் டிராவிட்டுக்கு இந்திய அணியினர் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்றும் சேவாக் கோரிக்கை வைத்துள்ளார்.
ஏனெனில் சச்சினுக்கு நிகராக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ராகுல் டிராவிட் ஒரு வீரராக தம்முடைய கேரியரில் உலகக் கோப்பையை வெல்லாமலேயே ஓய்வு பெற்றார். எனவே குறைந்தபட்சம் பயிற்சியாளராக டிராவிட் உலகக் கோப்பையுடன் விடை பெறுவதற்கு இந்திய அணி பாடுபட வேண்டும் என்று தெரிவிக்கும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் சச்சின் டெண்டுல்கருக்காக 2011 உலகக் கோப்பையில் விளையாடினோம்”
“எனவே இந்த டி20 உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட்டுக்காக விளையாட வேண்டும். குறைந்தபட்சம் அவர் பயிற்சியாளராக உலகக் கோப்பையை வென்று உலகக்கோப்பை வின்னர் என்ற பட்டத்தை பெற வேண்டும். ஒரு வீரராக அதை அவர் பெற்றதில்லை. மேலும் இது போன்ற ஒரு பொழுதுபோக்கு நிறைந்த உலகக் கோப்பையை நான் பார்த்ததில்லை”
இதையும் படிங்க: அரையிறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணியை நினைத்து சந்தோஷத்தில் இந்திய ரசிகர்கள் – ஏன் தெரியுமா?
“ஆஸ்திரேலிய போட்டியில் ரோஹித் சர்மா 6 ஓவர்கள் களத்தில் நிற்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் பவர் பிளே ஓவர்கள் தாண்டியும் விளையாடினார். அப்படி விளையாடிய அவர் என்ன செய்தார் என்பதை பாருங்கள். அவர் நம்முடைய இதயத்தை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார் இதை விட அவரிடமிருந்து வேறு என்ன வேண்டும்” என்று கூறினார்.