- Advertisement -
இந்திய கிரிக்கெட்

430/3 டூ 471க்கு அவுட்.. 500 ரன்ஸ் கோட்டை விட்டு சொதப்பிய இந்தியா.. 77 வருட மோசமான உலக சாதனை

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. லீட்ஸ் நகரில் நடைபெறும் அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் 42 ரன்னில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த சாய் சுதர்சன் அறிமுகப் போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். ஆனால் மறுபுறம் சிறப்பாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்தார். அடுத்ததாக வந்த கேப்டன் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஜெயஸ்வால் சதத்தை அடித்து 101 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

தவறிய 500 ரன்ஸ்:

அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்து அசத்திய கில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். 3வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி இந்தியாவை 400 ரன்கள் தாண்ட உதவியது.

அதில் ரிஷப் பண்ட் 99இல் இருந்த போது சிக்ஸருடன் சதத்தை அடித்து அமர்க்களமாக கொண்டாடினார். சிறிது நேரத்தில் சுப்மன் கில் 147 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார். ஆனால் அடுத்ததாக 7 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த கருண் நாயர் டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பண்ட்டும் 134 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

மோசமான சாதனை:

ஆனால் அடுத்ததாக வந்த சர்துள் தாகூர் 1, ரவீந்திர ஜடேஜா 11, ஜஸ்ப்ரித் பும்ரா 0, பிரசித் கிருஷ்ணா 1 ரன்னில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 430/3 என்ற வலுவான நிலையில் இருந்த இந்தியா மேற்கொண்டு 41 ரன்களை மட்டுமே அடித்து 7 விக்கெட்டுகளை இழந்து 471 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இத்தனைக்கும் 3 பேட்ஸ்மேன்கள் சதத்தை அடித்தும் இந்தியா 500 ரன்கள் குவிக்கும் பொன்னான வாய்ப்பைக் கோட்டை விட்டு சொதப்பியது.

இதன் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 3 சதங்கள் அடித்தும் கடைசியில் 500 ரன்களை கூட அடிக்காமல் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற பரிதாபமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 2016 செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 3 சதங்கள் அடித்த தென்னாப்பிரிக்கா 475 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: 8 வருடத்திற்கு பின் கிடைத்த வாய்ப்பில் இப்படியா ஆகனும்? கருண் நாயருக்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஏமாற்றம்

இது போக 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 400+ எடுத்தும், கடைசியில் குறைந்த ரன்களுக்குள் (41) ஆல் அவுட்டாகி 500 ரன்களை தொடாத அணி என்ற பரிதாபமான உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 1948 ஆஷஸ் தொடரில் இதே மைதானத்தில் 426/3 என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து மேற்கொண்டு 70 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவிடம் 496க்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனை. இங்கிலாந்துக்கு பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தனர்

- Advertisement -