IND vs BAN : அசத்திய அஷ்வின் ஜோடி, பெரிய ஸ்கோர் குவித்து பந்து வீச்சில் மிரட்டும் இந்தியா – தேனீர் இடைவேளை நிலவரம் இதோ

Siraj ashwin
Advertisement

2023 ஜூன் மாதம் இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற தற்போது புள்ளி பட்டியல் 5வது இடத்தில் இருக்கும் இந்தியா டிசம்பர் 14ஆம் தேதியன்று துவங்கிய வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. குறிப்பாக சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த இந்தியாவுக்கு சுப்மன் கில் 20, கேப்டன் கேஎல் ராகுல் 22 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் பொறுப்பின்றி ஆட்டமிழந்த நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

அதனால் 48/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறி இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய ரிசப் பண்ட் தமக்கே உரித்தான அதிரடி ஸ்டைலில் 5 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்க விட்டு புஜாராவுடன் இணைந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி நங்கூரமாக நின்ற புஜாராவுடன் இணைந்து வங்கதேச பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு 5வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக 5வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த இந்திய ஜோடியாக அவர்கள் சாதனை படைத்த போது சதத்தை நெருங்கிய புஜாரா துரதிஷ்டவசமாக 90 (203) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

தூக்கிய அஷ்வின்:
அடுத்து அந்த அக்சர் பட்டேல் முதல் நாளின் கடைசி பந்தில் அவுட்டான போதிலும் இந்தியா 278/6 ரன்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து இன்று துவங்கிய 2வது நாளில் போல்டாகியும் பெய்ல்ஸ் கீழே விழாத காரணத்தாலும் கேட்ச் தவற விட்ட காரணத்தாலும் 2 முறை தப்பி 82 ரன்களில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரியுடன் 86 (192) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். இருப்பினும் அவருடன் 2வது நாளில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் அடுத்து வந்த குல்தீப் யாதவுடன் இணைந்து வங்கதேசத்துக்கு தொல்லை கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து உணவு இடைவெளியை கடந்தார்.

அதன் பின்பும் எளிதில் அவுட்டாகாமல் அடம் பிடித்த இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு அற்புதமாக செயல்பட்டு முக்கியமான 87 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை 400 ரன்களை தாண்ட உதவிய போது அரைசதம் கடந்த அஷ்வின் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 58 (113) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் தனது பங்கிற்கு அட்டகாசமாக செயல்பட்ட குல்தீப் யாதவ் 5 பவுண்டரியுடன் 40 (114) ரன்களில் அவுட்டான பின் உமேஷ் யாதவ் அதிரடியாக 15* (10) ரன்கள் எடுத்தாலும் முகமது சிராஜ் 4 ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் முடிந்த அளவுக்கு போராடிய இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்து அவுட்டானது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் மற்றும் மெகதி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். இப்போட்டியில் நடைபெறும் பிட்ச் முதல் நாளிலிருந்தே பந்து வீச்சுக்கு கை கொடுக்க ஆரம்பித்ததை விராட் கோலி அவுட்டானத்தில் தெளிவாக பார்க்க முடிந்தது.

அதனால் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்தியா முதல் இன்னிங்ஸில் பெரிய ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் புஜாரா, பண்ட், ஸ்ரேயாஸ் போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அஷ்வின் போன்ற லோயர் மிடில் ஆடர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்த சாதனை பயணம், கேப்டன் பதவியை ராஜினாமா செய்த கேன் வில்லியம்சன் – காரணம் இதோ

அதை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை துவக்கிய வங்கதேசத்துக்கு முதல் பந்திலேயே தொடக்க வீரர் சான்டோவை அவுட்டாக்கி முகமது சிராஜ் அதிர்ச்சி கொடுத்த நிலையில் அடுத்த சில ஓவர்களில் யாசிர் அலி உமேஷ் யாதவிடம் கிளீன் போல்ட்டாகி சென்றார். அதனால் 5/2 என்ற தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற வங்கதேசம் 2வது நாள் தேநீர் இடைவெளியில் போராடி 37/2 என்ற நிலையுடன் விளையாடி வருகிறது.

Advertisement