- Advertisement -
இந்திய கிரிக்கெட்

34/3 டூ 176 ரன்ஸ்.. ரோஹித் வார்த்தையை காப்பாற்றிய கிங் கோலி.. அக்சர், துபே.. இந்தியா உலக சாதனை ஸ்கோர்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அடுத்தடுத்த பவுண்டரிகளை அடித்து கணக்கை துவங்கினர். ஆனால் அவருடன் எதிர்ப்புறம் அதிரடி காட்ட முயற்சித்த கேப்டன் ரோஹித் சர்மா 9 (5) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் சுமாராக ஷாட்டை அடித்து டக் அவுட்டானார்.

- Advertisement -

உலக சாதனை ஸ்கோர்:
போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவும் 3 (4) ரன்களில் அவுட்டானதால் 34/3 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது. அதனால் விராட் கோலி நங்கூரமாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். அதில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அட்டகாசமான சிக்சர்களை பறக்க விட்ட அக்சர் பட்டேல் அழுத்தத்தை உடைத்தார்.

அந்த வகையில் 14 ஓவர்கள் வரை நிலைத்து நின்று விளையாடிய இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றியது. ஆனால் அப்போது அக்சர் பட்டேல் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 47 (31) ரன்களில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். இருப்பினும் அவருடன் சேர்ந்து விளையாடிய விராட் கோலி கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார்.

- Advertisement -

அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த சிவம் துவே தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் டெத் ஓவர்களில் இந்த இருவருமே அதிரடியாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது விராட் கோலி 6 பவுண்டரி 2 சிக்சருடன் 76 (58) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய சிவம் துபே தம்முடைய பங்கிற்கு 3 பவுண்டரி 1 சிக்சருடன் 27 (16) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஹர்திக் பாண்டியா 5*, ஜடேஜா 2 ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 176/7 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன் கடந்த 2021 ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 173/2 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: அவர் எப்படி பட்ட ஒரு வீரர்னு நான் சொல்ல வேண்டியது இல்ல.. விராட் கோலிக்கு ஆதரவாக – கிரிஸ் கெயில் கூறியது என்ன?

தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நோர்ட்ஜே 2, மகாராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இந்த தொடரில் ஆரம்பம் முதலே தடுமாறிய விராட் கோலி ஃபைனலில் அடிப்பார் என்று ரோகித் சர்மா மற்றும் டிராவிட் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். அவர்களது நம்பிக்கையை காப்பாற்றியுள்ள விராட் கோலி தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்துள்ளார். அதே போல தொடர் முழுவதும் தடுமாறிய துபேவும் இப்போட்டியில் அசத்தினார்.

- Advertisement -