- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs BAN : 3வது போட்டியில் ப்ரம்மாண்டம் காட்டிய இந்தியா – வங்கதேசத்தை அடித்து துவைத்து 19 வருட சாதனை வெற்றி

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டு விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த நிலைமையில் டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதில் கேஎல் ராகுல் தலைமையில் இந்தியா களமிறங்கியது. சட்டகிரோம் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஷிகர் தவான் 3 (8) ரன்னில் வழக்கம் போல அவுட்டாகி சென்றார்.

இருப்பினும் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்ற இசான் கிசான் அதை தங்கமாக மாற்றும் வகையில் அடுத்து வந்த விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்களை குவித்தார். அவரது ஆட்டத்தை பார்த்து ஒருபுறம் விராட் கோலி கம்பெனி மெதுவாக பேட்டிங் செய்த நிலையில் மறுபுறம் முதலிரண்டு போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்ட இசான் கிசான் சரவெடியாக பேட்டிங் செய்து இந்தியாவை வலுப்படுத்தினார்.

ப்ரம்மாண்ட வெற்றி:
2வது விக்கெட்டுக்கு 290 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் வெறித்தனமாக பேட்டிங் செய்த இஷான் கிஷான் 24 பவுண்டரி 10 சிக்ஸர்களை பறக்க விட்டு இரட்டை சதமடித்து ஒரு வழியாக 210 (131) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 3, கேஎல் ராகுல் 8 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபுறம் அசத்தலாக செயல்பட்ட விராட் கோலி தனது பங்கிற்கு 11 பவுண்டர் 2 சிக்ஸருடன் சதமடித்து 113 (91) ரன்கள் விளாசி அவுட்டான நிலையில் கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் 37 (27) ரன்களும் அக்சர் படேல் 20 (17) ரன்களும் எடுத்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 409/8 ரன்கள் குவித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து 410 என்ற மெகா இலக்கை துரத்திய வங்கதேசத்துக்கு அனாமல் ஹைக் 8 (7), கேப்டன் லிட்டன் தாஸ் 29 (26) என தொடக்க வீரர்கள் குறைவான ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் சாகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 43 (50) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஏனெனில் அவருக்கு பின் வந்த முஸ்பிகர் ரஹீம் 7, யாசிர் அலி 25, முகமதுல்லா 20, முதலிரண்டு போட்டிகளில் மாயாஜாலம் நிகழ்த்திய மெஹதி ஹசன் 3 என முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். இறுதி வரை 34 ஓவரிலேயே 182 ரன்களுக்கு வங்கதேசத்தை சுருட்டிய இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியா புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு தாக்காவில் நடைபெற்ற போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். முன்னதாக முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து இத்தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டாலும் இந்த சம்பிரதாய போட்டியில் அதற்கு பழி தீர்க்கும் வகையில் சரவெடியாக பேட்டிங் செய்த இந்தியா பந்து வீச்சிலும் சரியாக செயல்பட்டு பெரிய வெற்றியை சுவைத்து 2 – 1 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்த்தது.

இதையும் படிங்க: IND vs BAN : ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கரை மிஞ்சிய கிங் கோலி – 2 புதிய வரலாற்று சாதனைகளை படைத்து அசத்தல்

மேலும் இத்தொடரை இழந்தாலும் வங்கதேசத்தை விட எந்த வகையிலும் தரம் குறைந்து விடாத இந்தியா இந்த கடைசிப் போட்டியில் பதிவு செய்த பிரம்மாண்ட ஆறுதல் வெற்றியுடன் தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு இஷான் கிசான் போன்ற தரமான வீரர் கிடைத்த மகிழ்ச்சியில் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

- Advertisement -
Published by