
வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக அஸ்வின் 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் சுமாராக விளையாடி 149 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் ஃபாலோ ஆன் கொடுக்காமல் விளையாடிய இந்தியா 2வது இன்னிங்ஸில் 287-4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 109, சுப்மன் கில் 119* ரன்கள் எடுத்தனர். இறுதியில் 515 ரன்களை துரத்திய வங்கதேசம் மீண்டும் தடுமாற்றமாக விளையாடி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சந்தித்தது. அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் சாண்டோ 82 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விட்ட வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக கடந்த 1932ஆம் ஆண்டு முதல் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை 580 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 179* வெற்றிகளையும் 178 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 222 போட்டிகள் டிராவில் முடிந்தன. 1 போட்டி சமனில் முடிந்தது.
குறிப்பாக சென்னையில் பெற்ற இந்த வெற்றியையும் சேர்த்து கடந்த 92 வருடங்களில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியை விட அதிக வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இது போக இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. ஆனால் கடைசியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வாயிலாக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் எதிரணி முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்ட பின் முதல் முறையாக இந்தியா வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: அவருக்கு நன்றி.. சென்னையில் ரசிகனாக பாத்த இந்திய அணியில் விளையாடுவது ஸ்பெஷல்.. ஆட்டநாயகன் அஸ்வின் பேட்டி
ஆம் வரலாற்றில் 1969, 2001 ஆகிய வருடங்களில் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்ட பின் இந்தியா தோற்றது. அதே போல 1978, 1982, 1987, 1997, 1999, 2019 வருடங்களில் முறையே வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, இலங்கை அணிகள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யுமாறு சொன்ன போட்டிகளில் இந்தியா தோற்றது. தற்போது அதை இப்போட்டியில் மாற்றியுள்ள இந்தியா வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது.