
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளுடன் குரூப் ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் வலுவாக முதலிடத்தைப் பிடித்தது.
குறிப்பாக முதல் போட்டியிலேயே அமீரகத்தை 57க்கு சுருட்டிய இந்தியா 4.5 ஓவரில் இலக்கைத் தொட்டு பெரிய வெற்றி பெற்றது. அதனால் முதல் போட்டியிலேயே இந்தியா +10.483 ரன்ரேட்டை பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அடுத்து நடைப்பெற்ற போட்டியில் பாகிஸ்தானை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 20 ஓவரில் 127/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.
பின்னர் பேட்டிங் செய்த இந்தியா 15.5 ஓவரில் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது. அதனால் 2 போட்டிகளில் முடிவில் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்தியா +4.793 என்ற ரன்ரேட்டை கொண்டுள்ளது. அந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் குரூப் ஏ பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் மோதின.
அந்தப் போட்டியில் அமீரகம் தங்களுடைய சொந்த மண்ணில் ஓமனை 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் வெற்றியைப் பெற்றது. அதன் காரணமாக இந்தியா 2025 ஆசியக் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. அதாவது குரூப் ஏ பிரிவில் ஓமன் -3.375, அமீரகம் -2.030 அணிகளின் ரன்ரேட் படுமோசமாக இருக்கிறது.
அதே போல +1.649 ரன்ரேட் கொண்டுள்ள பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்குச் செல்ல கடைசிப் போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதனால் +4.793 ரன்ரேட்டை பெற்றுள்ள இந்தியா கடைசிப் போட்டியில் தோற்றாலும் டாப் 2 இடங்களில் மட்டுமே இருக்கும். அதன் காரணமாகவே தங்களுடைய கடைசிப் போட்டிக்கு முன்பாகவே இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று மாஸ் காட்டியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய அணியை அதை வலுகட்டாயமா செய்ய வெச்சா இதான் நடக்கும்.. யாருக்குமே விருப்பமில்ல.. ரெய்னா விமர்சனம்
இதைத் தொடர்ந்து தனது கடைசிப் போட்டியில் ஓமனுக்கு எதிராக இந்தியா களமிறங்க உள்ளது. அந்தப் போட்டியிலும் கத்துக்குட்டி ஓமன் அணியை இந்தியா எளிதாக வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றில் இந்தியா 3 போட்டிகளில் விளையாடி ஃபைனலுக்கு செல்ல முயற்சிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.