IND vs ENG : காலம் கடந்தாச்சு, 5வது போட்டியில் இந்தியா வெல்வது கடினம் – இங்கிலாந்து வீரர் அதிரடி கணிப்பு

ENG
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இங்கிலாந்து பங்கேற்கும் ரத்து செய்யப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அப்போதிருந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியான விராட் கோலி தலைமையிலான இந்தியா மண்ணைக் கவ்வ வைத்து 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் மான்செஸ்டரில் துவங்குவதாக இருந்த 5-வது போட்டிக்கு முன்பாக கரோனா பரவல் ஏற்பட்டதால் அப்போட்டியை ரத்து செய்த இந்திய அணியினர் உடனடியாக நாடு திரும்பி ஐபிஎல் தொடரில் பங்கேற்றனர்.

INDvsENG

- Advertisement -

தற்போது நடைபெறப்போகும் அந்த கடைசி போட்டியில் வெற்றிவாகை சூட போவது யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே தொடரில் முன்னிலை வகிக்கும் இந்தியா இந்த போட்டியில் வென்று கடந்த 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது மிகப்பெரிய சவாலாக அமையப் போகிறது. ஏனெனில் கடந்த முறை ஜோ ரூட் தலைமையில் அம்பியாக திணறிக் கொண்டிருந்த இங்கிலாந்து இம்முறை புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அந்நியனாக மாறி அதிரடியான வெற்றிகளை குவிக்க தொடங்கியுள்ளது.

வலுவான இங்கிலாந்து:
கடந்த சில வருடங்களாக ஜோ ரூட் தலைமையில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்துக்கு புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் – புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிரடியை மட்டுமே விரும்பக்கூடிய அவர்களது தலைமையில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிரடியாகவும் அற்புதமாகவும் விளையாடிய இங்கிலாந்து 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது. அதனால் மிகுந்த புத்துணர்ச்சியுடன் வலுவான அணியாக மாறியுள்ள இங்கிலாந்து இப்போட்டியில் அதே அதிரடியுடன் விளையாடி தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் என்று ஏற்கனவே அதன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளார்.

England Test Ben Stokes

மறுபுறம் ஏற்கனவே பெற்றுக் கொடுத்த 2 வெற்றிகள் உட்பட மொத்தம் 40 வெற்றிகளுடன் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டன் என்று சாதனைப் படைத்த விராட் கோலிக்கு பதில் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை இலங்கை போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளார். எனவே முதல் முறையாக இந்த போட்டியின் வாயிலாக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை வழி நடத்தப் போகும் அவருக்கு இப்போட்டி நிச்சயம் மாபெரும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

காலம் கடந்தாச்சு:
அதைவிட கரோனாவால் தனிமைப்படுத்தி கொண்டுள்ள அவர் முதலில் இப்போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த வருடமே இப்போட்டி முடிந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்று தெரிவிக்கும் இங்கிலாந்து வீரர் மொயின் அலி இம்முறை வலுவாக மாறியுள்ள இங்கிலாந்தை சொந்த மண்ணில் சாய்ப்பது கடினம் என்று கூறியுள்ளார். எனவே இப்போட்டியில் இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்யும் என்று கணித்துள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

Moeen

“இந்த தொடர் கடந்த வருடமே முடிந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும். சொல்லப் போனால் 4 – 5 வாரங்கள் முன்பு கேட்டிருந்தால் கூட இந்தியா வெல்லும் என நான் கூறியிருப்பேன். ஆனால் தற்போது இங்கிலாந்து வெல்லும் என்று நம்புகிறேன். இந்தியா தற்போது சற்று அழுத்தத்தில் உள்ளார்கள். கடந்த வருடம் இந்தியா 4 போட்டிகளில் விளையாடியது. ஆனால் இம்முறை ஒரு பயிற்சி போட்டி மற்றும் வலைப்பயிற்சி மட்டுமே செய்துள்ளது. எனவே தற்சமயத்தில் என்னுடைய கருத்துப்படி இங்கிலாந்து வெல்லும் என்று நினைக்கிறேன். ஏனெனில் 3 போட்டிகளில் விளையாடிய அவர்கள் கடந்த வருடத்தை விட சிறப்பாக விளையாடி நல்ல தன்னம்பிக்கை பெற்றுள்ளனர்”

- Advertisement -

“அவர்களின் மனநிலைமை மாறி நேர்மறை கிரிக்கெட் விளையாடுகிறார்கள். பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. கடந்த வருடம் கேஎல் ராகுல் – ரோஹித் சர்மா அபார பேட்டிங் செய்தது இங்கிலாந்து பிரச்சினையாக இருந்தது. ஆனால் தற்போது ராகுல் ஏற்கனவே இல்லை, ரோகித் சர்மாவும் கேள்விக்குறியாக உள்ளதால் இங்கிலாந்து வெல்லும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : விராட் கோலியின் நீண்டநாள் டி20 சாதனையை முடியடித்த பாபர் அசாம் – பாகிஸ்தான் வாரியம் கொடுத்த ரிப்ளை

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடப் போவதாக அறிவித்துள்ள மொயின் அலி அதற்கு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கலம் தான் முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement