ஐசிசி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் 19வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் தோற்கடித்தால் இந்தியா செமி ஃபைனல் செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் போராடி 110-6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 28, ப்ரூக் ஹல்லிடே 22 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நஸ்ரா சந்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 111 ரன்களை 10.4 ஓவரில் எடுத்தால் பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்லலாம் என்ற நிலை உருவானது.
2016க்குப்பின் வெற்றி:
ஒருவேளை 10.5 ஓவருக்கு மேல் வெற்றி பெற்றால் இந்தியா செமி ஃபைனல் செல்லும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் மிகவும் திண்டாட்டமாக பேட்டிங் செய்து 11.4 ஓவரில் 56 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஃபாத்திமா சனா 31 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக எமிலியா கெர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மட்டுமின்றி இந்தியாவையும் சேர்த்து இத்தொடரிலிருந்து வெளியேற்றியது. மேலும் 2016க்குப்பின் 8 வருடங்கள் கழித்து மகளிர் டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று நியூசிலாந்து அசத்தியது. மறுபுறம் பாகிஸ்தான் ஏதாவது உதவி செய்யுமா என்று இந்திய ரசிகர்கள் நேற்று முதலே எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
வீட்டுக்கு கிளம்பிய இந்தியா:
ஆனால் தங்களுடைய வெற்றிக்கும் போராடாத பாகிஸ்தான் அணி இந்தியாவுக்காகவும் உதவி செய்யும் நோக்கத்துடன் விளையாடியதாக தெரியவில்லை. மேலும் 2019 ஆடவர் உலகக் கோப்பையில் இதே போன்ற சூழ்நிலையில் இங்கிலாந்திடம் தோற்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்வதற்கு உதவவில்லை. எனவே அந்த தோல்விக்கு இன்று பழி வாங்கியுள்ளதாக பாகிஸ்தான் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசுகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு மட்டும் காயம் பிரச்சனையே இல்ல.. ஜெய்க்கிறது ரொம்ப கஷ்டம்.. நியூஸிலாந்து கோச் ஓப்பன்டாக்
மறுபுறம் பாகிஸ்தான் உதவியால் செமி ஃபைனல் சென்றிருந்தாலும் நம்முடைய மகளிரணி நாக் அவுட் சுற்றில் தோல்வியையே சந்தித்திருக்கும் என்று இந்திய ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா மொத்தம் 10 ஒருநாள் உலகக்கோப்பை, 9 டி20 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளது. ஆனால் அந்த 19 உலகக் கோப்பைகளிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணி இன்னும் ஒரு கோப்பை கூட வெல்லவில்லை என்பது ரசிகர்களை வேதனையில் வாழ்த்துகிறது.



