இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற 2 அணிகளும் போராட உள்ளன. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்தத் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூரு நகரில் துவங்க உள்ளது.
இந்நிலையில் உலகிலேயே இந்திய அணிக்கு மட்டும் முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்தால் பின்னடைவு ஏற்படுவதில்லை என நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ஏனெனில் காயமடையும் வீரரின் இடத்தை நிரப்ப மிகவும் திறமையான வீரர்கள் இந்தியாவில் காத்திருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் இந்தியா அதிரடியான கிரிக்கெட்டை விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காயம் பிரச்சனையில்ல:
எனவே இத்தொடரில் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் என்று வெளிப்படையாக தெரிவிக்கும் ஸ்டெட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒருவேளை இந்திய அணியில் யாரேனும் காயத்தை சந்தித்தால் அவர்கள் மற்ற அணிகளை போல பாதிப்படைவதாக தெரியவில்லை. ஏனெனில் அதே இடத்தை சமமாக நிரப்பக்கூடிய ஒருவர் தயாராக இருக்கிறார்”
“யாரேனும் காயத்தை சந்தித்தால் அந்த இடத்தை நிரப்புவதற்காக இந்திய அணி நிர்வாகம் அழைக்க ஏராளமான வீரர்கள் உள்ளனர். அந்த வீரர்கள் மிகவும் திறன் வாய்ந்தவர்கள். அந்த வகையில் இந்திய அணியினர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய நிறைய அனுபவமிக்க வீரர்களை கொண்டுள்ளனர். மேலும் இந்திய அணினர் விளையாடும் கிரிக்கெட்டின் பிராண்ட் காரணமாக அவர்களை இங்கே எதிர்கொள்வது மிகவும் கடினமாகும்”
சவாலான இந்தியா:
“இதுவே எங்களுக்கு இங்கே காத்திருக்கும் சவாலாகும்” என்று கூறினார். அத்துடன் கடந்த இலங்கைத் தொடரில் சந்தித்த தோல்விக்கு பொறுப்பேற்று டிம் சௌதீ கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு இந்திய தொடரில் வாய்ப்பு கொடுப்பது பற்றி யோசித்து வருவதாகவும் ஸ்டெட் தெரிவித்துள்ளார். அதற்காக கடந்த இந்திய தொடர்களில் டிம் சௌதீ பவுலிங் செய்த வீடியோக்களை பார்த்து வருவதாகவும் ஸ்டெட் கூறியுள்ளார்.
இதையும்படிங்க: அஸ்வின், ஜடேஜாவை சமாளிப்பது கஷ்டம்.. ஆனா இதை செஞ்சா இந்தியாவில் ஜெயிக்க முடியும்.. ரவீந்திரா நம்பிக்கை
அவர் கூறுவது போல கடந்த இங்கிலாந்து தொடரில் கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஆகிய 2 முக்கிய வீரர்கள் காயமடைந்தனர். அப்போது வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் கடைசியில் அவர்களுடைய இடத்தை நிரந்தரமாக பிடிக்கும் அளவுக்கு அபாரமாக விளையாடி வெற்றியில் பங்காற்றினர். இது போக ருதுராஜ் போன்ற நிறைய வீரர்கள் காத்திருப்பதால் முக்கிய வீரர்கள் சந்திக்கும் காயங்கள் இந்திய அணியை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.