பெயரை பார்க்காமல் திறமைக்கு மதிப்பு கொடுங்க, பண்ட் – சாம்சன் தேர்வில் தேர்வுக்குழுவை விளாசும் முன்னாள் பாக் வீரர்

Rishabh Pant Sanju Samson
- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட வாய்ப்பு கிடைக்காதது நிறைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. கடந்த 2015இல் அறிமுகமான அவர் தன்னுடைய 2வது போட்டியை கடுமையான போராட்டத்திற்கு பின் 2019இல் விளையாடினார். அதன்பின் ஒரு வருடத்திற்கு ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை என நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்று வந்த அவர் ஐபிஎல் 2022 தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து ராஜஸ்தானை பைனலுக்கு அழைத்துச் சென்றார்.

Samson

- Advertisement -

ஆனாலும் அதன்பின் நடைபெற்ற தென் ஆப்ரிக்க தொடரில் அவரை தேர்வுக்குழு புறக்கணித்ததால் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். அதனால் அதைத்தொடர்ந்து நடைபெற்ற அயர்லாந்து டி20 தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் 2வது போட்டியில் தீபக் ஹூடாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி 176 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதுவரை அரைசதம் கூட அடிக்காததால் புறக்கணிக்கப்பட்டு வந்ததில் ஒரு நியாயமிருந்த நிலையில் 77 ரன்கள் குவித்த பின்பாவது ஓரளவு தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பெயரும் திறமையும்:
ஆனால் அதற்கடுத்த இங்கிலாந்து தொடரில் கழற்றிவிடப்பட்ட சஞ்சு சாம்சன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் என்று நிரூபித்தார். அதனால் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஸ்டேண்ட் பை லிஸ்டில் சேர்க்கப்படாதது கூட பரவாயில்லை. ஆனால் அதற்கு முன்பாக நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்க டி20 தொடரிலும் சேர்க்காதது ரசிகர்களை கோபமடைய வைத்தது. அதனால் ரசிகர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Rishabh Pant

மறுபுறம் அவரது வாய்ப்பையும் சேர்த்து 2017 முதல் 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளில் விளையாடி வரும் ரிஷப் பண்ட்டை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராக பிசிசிஐ வளர்க்க நினைப்பதால் என்ன நடந்தாலும் நீக்க மாட்டோம் என்ற வகையில் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து பெயரெடுத்ததால் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பினாலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி20 அணியை பொறுத்தவரை பெயரை பார்க்காமல் திறமையை பார்த்து வாய்ப்பளிக்க வேண்டுமென பிசிசிஐயை முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா சாடியுள்ளார்.

- Advertisement -

சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இந்தியா நட்பு ரீதியில் வீரர்களை தேர்வு செய்யக்கூடாது. இதுவரை ரிஷப் பண்ட் சிறந்த டி20 வீரராக தோன்றவில்லை. அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அதிகமாகப் பொருந்தக்கூடியவர். அவரை விட சஞ்சு சாம்சன் சிறந்தவர். ஏனெனில் சமீப காலங்களில் ரிஷப் பண்ட் செயல்பாடுகள் சுமாராக உள்ளது”

Danish-Kaneria

“அத்துடன் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் ஏற்கனவே உள்ளதால் சாம்சன் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருக்க தகுதியுடையவர். 2020இல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடிய போது அவர் நம்மை கவரும் வகையில் செயல்பட்டார். அவருடைய பேட்டிங் ஸ்டைலுக்கு ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் சிறப்பாகப் பொருந்தும். பண்ட் நல்ல வீரர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் தற்சமயத்தில் அவர் இந்திய டி20 அணியில் இடம் பெற சரியானவரல்ல” என்று கூறினார்.

மேலும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெறாதது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தால் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டிருப்பார். இருப்பினும் டி20 உலக கோப்பையில் அவர் தேர்வு செய்யப்படாததால் இந்த தொடரில் அவருக்கு வாய்ப்பளித்து அதில் அவர் சிறப்பாக செயல்பட்டால் தேர்வுக்குழுவுக்கு அதிகப்படியான அழுத்தம் ஏற்படும் என்பதால் கழற்றி விடப்பட்டுள்ளார். அதனால் தான் அவர் இந்தியா ஏ அணிக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சஞ்சு சாம்சனை உலக கோப்பையில் இந்தியா மிஸ் செய்யும்” என்று கூறினார்.

Advertisement