அவர் மட்டும் முதல் டெஸ்டில் இருந்திருந்தா.. இந்தியாவின் கதையே வேற மாதிரி இருந்திருக்கும்.. கவாஸ்கர் ஆதங்கம்

Sunil Gavaskar 9
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் முதல் தொடங்கியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் முதல் முறையாக தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்தியா சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

ஆனால் அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தடுமாற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா முதல் நாள் முடிவில் 208/8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 17, கில் 2, விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

கவாஸ்கர் ஆதங்கம்:
அதனால் 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி வரும் கேஎல் ராகுல் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்து 70* ரன்கள் குவித்து போராடி வருகிறார். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் எடுத்து சவாலை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இப்போட்டியில் அனுபவமிக்க அஜிங்க்ய ரகானே இருந்திருந்தால் இந்தியாவின் ஸ்கோர் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று சுனில் கவாஸ்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஜோஹன்ஸ்பர்க் டெஸ்ட் போட்டியின் பிட்ச் பற்றி இப்போட்டியில் அனைவரும் பேசுகின்றனர். அப்போட்டியில் நானும் அங்கிருந்தேன். ஆம் அது விளையாடுவதற்கு எளிதான பிட்ச்சாக இல்லை. ஆனால் அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் தேர்வு செய்யப்படாத ரகானே அந்த போட்டியில் வாய்ப்பு பெற்றார்”

- Advertisement -

“அந்த வாய்ப்பில் அவர் முதலிரண்டு போட்டியில் இந்தியா தம்மை தவற விட்டதை காண்பித்தார். ஏனெனில் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா பெரிய வித்தியாசத்தில் தோற்கவில்லை. அந்த வகையில் வெளிநாடுகளில் எப்போதுமே நன்றாக செயல்படும் ரகானே இன்றைய நாளில் இருந்திருந்தால் இந்தியாவின் கதை வித்தியாசமாக இருந்திருக்கலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: வக்கார் யூனிஸ், ஸ்டைன் போன்ற ஜாம்பவான்களை ஓரம்கட்டும் ரபாடா.. 28 வயதிலேயே அபாரா சாதனை

அவர் கூறும் 2018 ஜோஹன்ஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் ரகானே கடைசி நாளில் சவாலான பிட்ச்சில் 48 ரன்கள் குவித்து இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். அப்படி முக்கிய வீரராக இருந்த ரகானே கடந்த சில இடங்களாக சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் ஐபிஎல் மற்றும் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கம்பேக் கொடுத்து அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சொதப்பியதால் மீண்டும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement