மகளிர் டி20 உ.கோ : ஆசை காட்டி மோசம் செய்த இந்தியா, மீண்டும் நிகழ்ந்த அதே சொதப்பல் – கையிலிருந்த வெற்றி பறிபோனது எப்படி?

Indian Womens
- Advertisement -

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக தென்னாப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் குரூப் பி இடம் பிடித்த ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை தோற்கடித்தாலும் இங்கிலாந்திடம் தோற்றது. இருப்பினும் அயர்லாந்துக்கு எதிரான முக்கிய போட்டியில் வெற்றி பெற்று 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்த இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அந்த நிலைமையில் பிப்ரவரி 23ஆம் தேதியன்று அழகான நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு துவங்கிய முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் வலுவான ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. கடந்த 2020 டி20 உலக கோப்பையில் ஃபைனலிடம் தோற்றது உட்பட வரலாற்றில் பலமுறை ஆஸ்திரேலியாவிடம் சாரமாரியான அடிவாங்கிய இந்திய அணி இம்முறை அதற்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது.

- Advertisement -

அதே சொதப்பல்:
அந்த நிலையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவரில் 176/4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு 52 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த அலிஷா ஹீலி 25 (26) ரன்களில் அவுட்டாக மறுபுறம் அதிரடி காட்டிய பெத் மூனி 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 54 (37) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆஸ்லே கார்ட்னர் தனது பங்கிற்கு 5 பவுண்டரியுடன் 31 (18) ரன்கள் எடுத்து அவுட்டானாலும் மறுபுறம் 3வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் மெக் லென்னிங் அதிரடியாக 4 பவுண்டரி 2 சிக்சருடன் 49* (34) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தமான போட்டியில் வழக்கம் போல நட்சத்திர வீராங்கனை ஸ்மிருத்தி மந்தனா 2 (5) ரன்களிலும் ஷபாலி வர்மா 9 (6) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த யாஸ்திகா பாட்டியா 4 (7) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார். அதனால் 28/3 என ஆரம்பத்திலேயே திணறிய இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானாலும் 4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருடன் 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக செயல்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ஜெமிமா ரோட்ரிகர்ஸ் 6 பவுண்டரியுடன் 43 (24) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்து வந்து ரிச்சா கோஸ் உடன் கை கொடுத்த ஹர்மன்பிரீத் அரை சதம் கடந்ததால் இந்தியா வெற்றி பெறும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வெற்றி கையிலிருந்த அந்த சமயத்தில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் ஹர்மன்ப்ரீத் 52 (34) ரன்களில் அஜாக்கிரதையாக ரன் அவுட்டானது பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஏனெனில் அவருக்கு பின் ஸ்னே ராணா 10 (11) ராதா யாதவ் 0 (1) என லோயர் ஆர்டர் வீராங்கனைகள் வழக்கம் போல சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

இறுதியில் தீப்தி சர்மா 20* (17) ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவர்களில் 167/8 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா வழக்கம் போல சொதப்பியது. ஆஸ்லே கார்ட்னர் மற்றும் ப்ரவுன் ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியதால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களை நடப்பு சாம்பியன் என்பதை நிரூபித்து மற்றுமொரு பைனலுக்கு தகுதி பெற்ற சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

ஆனால் இதே தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் அண்டர்-19 உலகக்கோப்பையை முதல் முறையாக வென்றதால் நிச்சயம் சீனியர் கிரிக்கெட்டிலும் கோப்பை உறுதி என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு மீண்டும் மகளிர் அணியினர் ஆசை காட்டி மோசம் செய்த கதை அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க: எனக்காக இந்த 2 விஷயத்தை மட்டும் பண்ணுங்க ப்ளீஸ். இந்திய அணிக்கு அன்பு கட்டளையிட்ட – சுனில் கவாஸ்கர்

குறிப்பாக 2020 டி20 உலக கோப்பை, 2022 காமன்வெல்த் ஃபைனல் போலவே இம்முறையும் சுமாரான பவுலிங், சொதப்பலான டாப் ஆர்டர் பேட்டிங், வெற்றிக்கு போராடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் முக்கிய நேரத்தில் அவுட்டானது என கடந்த காலங்களில் செய்த சொதப்பல்களில் கொஞ்சம் முன்னேறாமல் அதே தவறை செய்துள்ள இந்திய மகளிரணி உலகக்கோப்பை கனவை சிதைத்து நாடு திரும்ப தயாராகியுள்ளனர்.

Advertisement