
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப்போட்டி மார்ச் நான்காம் தேதி துபாயில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கூப்பர் கோன்லி டக் அவுட்டான நிலையில் மறுபுறம் அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் 39 ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார்.
அடுத்ததாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 29 ரன்கள் எடுத்து ஜடேஜா சுழலில் அவுட்டானார். அடுத்ததாக வந்த ஜோஸ் இங்லீஷ் 11 ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கினார். இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பான அரை சதத்தை அடித்து 73 ரன்கள் குவித்து ஷமி வேகத்தில் போல்ட்டானார்.
அடுத்ததாக வந்த கிளன் மேக்ஸ்வெல் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினாலும் அலெக்ஸ் கேரி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி 61 ரன்கள் குவித்தார். இறுதியில் பென் துவார்சுஸ் 19, நாதன் எலிஸ் 10 ரன்கள் எடுத்தும் 49.3 ஓவரில் ஆஸ்திரேலியாவை 264 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக ஷமி 3, ஜடேஜா 2, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே தடுமாறிய கில் 8 ரன்னில் துவார்சுஸ் வேகத்தில் போல்ட்டானார். மறுபுறம் கேட்ச் வாய்ப்பை ஆஸ்திரேலியா தவற விட்டதால் வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் 28 ரன்னில் அவுட்டானார். அதனால் 43-2 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறிய போது விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினர்.
27 ஓவர்கள் வரை மிகவும் நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடிய இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த அக்ஸர் படேல் நிதானமாக விளையாட முயற்சித்து 27 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் மேக்ஸ்வெல் கேட்ச் விட்டதைப் பயன்படுத்தி நங்கூரமாக விளையாடிய விராட் கோலி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.
அதன் காரணமாக சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 84 (98) ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் பாண்டியா அதிரடியாக 28 (24), ராகுல் 42* (34) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் செய்ததால் 48.1 ஓவரில் ரன்கள் எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மேலும் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவை இத்தொடரில் இருந்து நாட் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்த இந்தியா பதிலடி கொடுத்து பழி தீர்த்தது.
இதையும் படிங்க: ஹிட்மேன்னா சும்மாவா.. ஐ.சி.சி தொடரில் இமாலய சாதனையை நிகழ்த்திய ரோஹித் – விவரம் இதோ
அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐசிசி ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2011 உலகக்கோப்பை காலி இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 261 ரன்களை சேசிங் செய்து வென்றதே முந்தைய சாதனை. ஆஸ்திரேலியாவுக்கு நாதன் எலிஸ், ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.