IND vs ENG : விராட் கையிலிருந்து கேப்டன்ஷிப் வந்ததும் ரோஹித்தால் டி20 அணியில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம்

Rohith
- Advertisement -

ஜூலை 9-ஆம் தேதியான நேற்று பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு முதல் முறையாக ஓபனிங் ஜோடியாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் முதல் விக்கெட்டுக்கு 49 ரன்களை அதிரடியாக குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தபோது ரோகித் சர்மா 31* (20) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த விராட் கோலி 1 (3) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த பந்திலேயே ரிஷப் பண்ட்டும் 26 (15) ரன்களில் நடையை கட்டினார்.

Ravindra Jadeja IND vs ENg

- Advertisement -

அதனால் 61/3 என மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவை காப்பாற்றுவார்கள் என கருதப்பட்ட ஹர்திக் பாண்டியா 12 (15) ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 15 (11) ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் ஏற்பட்ட சரிவை சரிசெய்ய மெதுவாக பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக்கும் 12 (17) ரன்களில் அவுட்டானதால் 150 ரன்களை தாண்டாது என்று கருதப்பட்ட இந்தியாவை நல்லவேளையாக ஹர்ஷல் படேல் முக்கியமான 13 (6) ரன்களும் கடைசி வரை அவுட்டாகாத ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரியுடன் 46* (29) ரன்களும் எடுத்து காப்பாற்றினர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அசத்திய இந்தியா:
அதை தொடர்ந்து 171 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜேசன் ராயை கோல்டன் டக் அவுட்டாக்கிய புவனேஸ்வர் குமார் 3-வது ஓவரில் கேப்டன் பட்லரை 4 (5) ரன்களில் அவுட் செய்தார். அதனால் 11/2 என திணறிய இங்கிலாந்துக்கு லியம் லிவிங்ஸ்டன் 15 (9) ஹரி ப்ரூக் 8 (9) டேவிட் மாலன் 19 (25) என முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர்.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

இறுதியில் மொயின் அலி 35 (21) ரன்களும் டேவிட் வில்லி 33* (22) ரன்களும் எடுத்து போராடிய போதிலும் இதர பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க தவறியதால் 17 ஓவர்களில் 121 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து பரிதாபமாக தோற்றது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்த ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தொடரின் முதல் போட்டியிலும் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்த இந்தியா இந்த வெற்றியால் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

- Advertisement -

தொடர் வெற்றிகள்:
முன்னதாக சமீபத்திய டெஸ்ட் போட்டியில் அனுபவமில்லாத ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்தியாவுக்கு 378 ரன்களை அசால்டாக சேஸிங் செய்த இங்கிலாந்து வரலாற்று தோல்வியை பரிசளித்தது. ஆனால் இந்த டி20 தொடரில் கேப்டனாக திரும்பியதுமே அடுத்தடுத்த பெரிய வெற்றிகளை பதிவு செய்துள்ள ரோகித் சர்மா அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதிலும் கடைசி 14 டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 14 வெற்றிகளை பதிவு செய்த முதல் கேப்டன் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

Rohith

கடந்த 2021 ஐசிசி டி20 உலக கோப்பையுடன் பதவி விலகிய விராட் கோலிக்கு பின்பு முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 3 டி20 தொடரில் தோல்வியடையாமல் தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ள அவரால் வெளிநாட்டு மண்ணில் வென்று காட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது வெளிநாட்டு மண்ணிலும் அதுவும் பட்லர், லிவிங்ஸ்டன் போன்ற தரமான வீரர்கள் அடங்கிய இங்கிலாந்தை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்துள்ள அவர் தனது கேப்டன்ஷிப் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.

- Advertisement -

வெற்றி ரகசியம்:
பொதுவாக டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களைப் பயன்படுத்தினால் வெற்றிகளை எளிதாக பெறலாம். அந்த பார்முலாவை விராட் கோலியிடம் இருந்து கேப்டன்ஷிப் பொறுப்பை வாங்கியதும் கச்சிதமாக பயன்படுத்திவரும் ரோகித் சர்மா பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டை விடக்கூடாது என்பதை விட ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்திய அணியில் ஏற்படுத்தியுள்ளார்.

rohith

40 பந்துகளில் 50 ரன்கள் அடிப்பது வெற்றியை தராது 30 ரன்களாக இருந்தாலும் அதை 15 பந்தில் இருமடங்கு அதிரடியாக விளாசினால் தான் வெற்றியைப் பெறமுடியும் என்ற எண்ணத்தை அனைத்து பேட்ஸ்மேன்களிடமும் விதைத்துள்ளார். அதை ஒரு தொடக்க வீரராக முன்னின்று செய்யும் அவர் இதர வீரர்களுக்கு முன்னோடியாக பவர்பிளே ஓவர்களில் 160 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை தெறிக்க விடுகிறார்.

- Advertisement -

அதன் பயனாக கடந்த 2021 டி20 உலகக்கோப்பைக்கு பின் சர்வதேச அளவில் பவர்ப்ளே ஓவர்களில் அதிக ரன்ரேட் விகிதத்தில் ரன்களை குவிக்கும் அணியாக இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அந்த பட்டியல் இதோ:
1. இந்தியா : 8.52
2. அயர்லாந்து : 8.56
3. வெஸ்ட் இண்டீஸ் : 8.23
4. நியூஸிலாந்து : 7.88
5. ஆஸ்திரேலியா : 7.68

இதையும் படிங்க : IND vs ENG : முரட்டுத்தன ஜோஸ் பட்லரை ஓடவிடும் நம்ம புவி, டி20 கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு வரலாற்று சாதனை

இதனால் கடந்த வருடம் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத இந்தியா வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் வெற்றி நடைபோடும் ரோகித் சர்மா தலைமையில் 2007க்கு பின் 2-வது உலக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement