IND vs ENG : முரட்டுத்தன ஜோஸ் பட்லரை ஓடவிடும் நம்ம புவி, டி20 கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு வரலாற்று சாதனை

Bhuvaneswar Kumar IND vs ENg
- Advertisement -

பர்மிங்காம் நகரில் ஜூலை 9-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 170/8 ரன்கள் சேர்த்தது. இப்போட்டியில் முதல் முறையாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பவர்ப்ளே ஓவர்களில் அதிரடி காட்டி 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தபோது 3 பவுண்டரி 2 சிக்சருடன் 31 (20) ரன்களில் ரோஹித் சர்மா அவுட்டானார். அப்போது வந்த விராட் கோலி 1 (3) ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்ற அடுத்த பந்திலேயே 4 பவுண்டரி 1 சிக்சருடன் ரிஷப் பண்ட் 26 (15) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனால் 61/3 என சுமாரான தொடக்கம் பெற்ற இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் வந்த முக்கிய பேட்ஸ்மேன்கள் சூர்யகுமார் யாதவ் 15 (11) ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 12 (15) ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சிக் கொடுத்தனர். அதனால் 89/5 என மேலும் தடுமாறிய இந்தியாவை காப்பாற்ற மெதுவாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கும் 12 (17) ரன்களில் ரன் அவுட்டானார். அதனால் 150 ரன்களை தாண்டுமா என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவை நல்ல வேளையாக ஹர்ஷல் படேல் முக்கியமான 13 (6) ரன்களும் கடைசி வரை அவுட்டாகாமல் போராடிய ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரியுடன் 46* (29) ரன்களும் எடுத்து காப்பாற்றினர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

மிரட்டிய புவி:
அதை தொடர்ந்து 171 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜேசன் ராயை கோல்டன் டக் அவுட்டாக்கிய புவனேஸ்வர் குமார் 3-வது ஓவரில் கேப்டன் பட்லரை 4 (5) ரன்களில் காலி செய்து மிரட்டலாக பந்துவீசினார். அதனால் 11/2 என்ன மோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்துக்கு லியம் லிவிங்ஸ்டன் 15 (9) ஹரி ப்ரோக் 8 (9) சாம் கரண் 2 (4) என முக்கிய பேட்ஸ்மென்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதனால் 60/6 என மொத்தமாக சரிந்த இங்கிலாந்தை காப்பாற்ற போராடிய மொயின் அலி 35 (21) ரன்களில் ஆட்டமிழக்க கடைசியில் டேவிட் வில்லி 3 பவுண்டரி 2 சிக்சருடன் 33* (22) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் இதர பேட்ஸ்மேன்கள் கைகொடுத்த தவறியதால் 17 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 121 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி இந்தியா இத்தொடரின் முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்ததால் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0* என்ற கணக்கில் கைப்பற்றி சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை இம்முறை கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு அனைவரும் பங்காற்றியிருந்தாலும் பந்துவீச்சில் 3 ஓவரில் வெறும் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 1 மெய்டன் உட்பட 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பட்லர் ஓட்டம்:
பொதுவாகவே குறைந்த ரன்களைக் கொடுத்து துல்லியமாக பந்து வீசுவதற்கு பெயர்போன புவனேஸ்வர் குமார் ஒவ்வொரு போட்டியிலும் தனது தரத்தை காட்டி வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்தின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஜோஸ் பட்லர் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் 863 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல் சமீப காலங்களில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் எந்த அளவுக்கு முரட்டுத்தனமாக பேட்டிங் செய்து வெறித்தனமான பார்மில் உள்ளார் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

- Advertisement -

அப்படிப்பட்ட அவரை முதல் போட்டியில் முதல் பந்திலேயே கிளீன் போல்டாக்கிய புவனேஸ்வர் குமார் இப்போட்டியில் 4 ரன்களில் காலி செய்தார். இதுபோக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புவனேஸ்வர் வீசிய 32 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள பட்லர் 5 முறை அவுட்டாகியுள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் பட்லர் அதிகமுறை அவுட் செய்த பவுலர் என்ற பெருமையும் புவனேஸ்வர் குமார் பெற்றுள்ளார்.

வரலாற்று சாதனை:
இதுபோக பவர் பிளே ஓவர்களில் பட்டாசாக பந்துவீசும் புவனேஸ்வர் குமார் இத்தொடரின் 2 போட்டிகளிலும் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் ஓவரிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற உலகசாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்(டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாட்டு வீரர்கள்):
1. புவனேஸ்வர் குமார் : 14*
2. டேவிட் வில்லி : 13*
3. ஏஞ்சேலோ மேத்தியூஸ் : 11

இதையும் படிங்க : IND vs ENG : இங்கிலாந்தை தெறிக்கவிட்ட ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலகசாதனை – முழுவிவரம்

மேலும் டி20 கிரிக்கெட்டில் முதல் ஓவரிலேயே புவனேஸ்வர் குமார் மட்டும் 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வரலாற்றில் என்று அனைத்து இந்திய பவுலர்களும் சேர்ந்து 15 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளனர். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (70 விக்கெட்டுகள்) எடுத்த இந்திய வேகப்பந்துவீச்சாளராக ஜஸ்ப்ரித் பும்ராவை (69 விக்கெட்டுகள்) முந்தியுள்ளார்.

Advertisement