
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக பங்கேற்கும் இந்த கடைசி டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா அக்டோபர் 2ஆம் தேதியன்று கௌகாத்தியில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 237/3 ரன்களை விளாசியது. 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே அற்புதமான தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 43 (37) ரன்களும் ராகுல் 57 (28) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.
அந்த தொடக்கத்தை அடுத்ததாக களமிறங்கி அற்புதமாக பயன்படுத்திய சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 61 (22) ரன்களும் விராட் கோலி தனது பங்கிற்கு 49* (28) ரன்களும் எடுக்க இறுதியில் தினேஷ் கார்த்திக் 17* (7) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். அதை தொடர்ந்து 238 என்ற கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 0, ரோசவ் 0, மார்க்ரம் 33 (19) என முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தினர்.
வென்றும் பயனில்லை:
அதனால் 47/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற தனது அணியை அடுத்ததாக களமிறங்கி நங்கூரமாகவும் அதிரடியாகவும் தூக்கி நிறுத்திய டேவிட் மில்லர் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் உடன் இணைந்து கடைசி வரை அவுட்டாகாமல் 174 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடினார். அதில் ஒருபுறம் அதிரடி காட்டிய மில்லர் 8 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 106* (47) ரன்கள் எடுத்த போதிலும் மறுபுறம் சற்று மெதுவாக விளையாடிய டீ காக் 69* (48) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் 221/3 ரன்களை மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்கா போராடி தோற்றது.
அதனால் 16 ரன்கள் வித்யாசத்தில் போராடி வென்ற இந்தியா வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. ஆனாலும் என்ன பயன் என்பது போல் தீபக் சஹரை தவிர்த்து எஞ்சிய அனைத்து இந்திய பவுலர்களும் இப்போட்டியில் ரன்களை வாரி வழங்கியது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. ஏனெனில் இப்போட்டியை போலவே பெரும்பாலும் பேட்டிங்கில் சக்கை போடு போடும் இந்தியா பந்து வீச்சில் குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவது சமீப காலங்களில் தோல்வியை பரிசளித்து வருகிறது.
அதிலும் ஆசிய கோப்பையில் புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் பவுலர் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்தது. அதனால் இன்னும் 15 நாட்களுக்குள் துவங்கும் உலக கோப்பைக்கு முன்பாக தவறுகளை திருத்திக்கொள்ள கடைசி வாய்ப்பாக கிடைத்துள்ள இந்த தென்னாப்பிரிக்க தொடரின் இப்போட்டியிலும் ஆரம்ப கட்ட ஓவர்களில் அசத்திய இந்திய பவுலர்கள் மீண்டும் கடைசி கட்ட ஓவர்களில் கொஞ்சமும் முன்னேறாமல் ரன்களை கொடுத்தனர்.
குறிப்பாக டெத் ஓவர்கள் (16 – 20) என்றழைக்கப்படும் கடைசி கட்ட ஓவர்களில் மட்டும் 82 ரன்களை கொடுத்த இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்த அணி என்ற தன்னுடைய சொந்த சாதனையை முறியடித்து மோசமான சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 82, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, கௌகாத்தி, 2022*
2. இந்தியா : 80, இங்கிலாந்துக்கு எதிராக, டர்பன், 2007
3. தென்ஆப்பிரிக்கா : 78, இந்தியாவுக்கு எதிராக, கௌகாத்தி, 2022*
விரைவில் நடைபெறும் உலகக் கோப்பையில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படும் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகிய நிலையில் இதர பவுலர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை உணராமல் சொந்த மண்ணிலேயே இப்படி ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ள இந்திய பவுலர்கள் எப்படி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் சமாளிக்க போகிறார்களோ என்ற கவலை ரசிகர்களிடம் காணப்படுகிறது.
அதிலும் புவனேஸ்வர் குமார் ஏற்கனவே டெத் ஓவர்களில் திண்டாடும் நிலையில் இளம் வீரரான அர்ஷிதீப் சிங் ஓரளவு காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ இப்போட்டியில் வரலாற்றிலேயே இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிகபட்சமாக 62 ரன்களை வாரி வழங்கி பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.