ஒரே நோபால் தான். நொறுங்கிய கோடிக்கணக்கான இதயங்கள் – உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்தியா

- Advertisement -

ஐசிசி மகளிர் உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று நியூசிலாந்து நாட்டில் கோலாகலமாக துவங்கியது. அதில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. லீக் மற்றும் நாக் அவுட் சுற்று என 2 வகையான சுற்றுகளின் அடிப்படையில் இந்த உலக கோப்பையின் வெற்றியாளரை தீர்மானிக்க 31 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் முதலில் துவங்கிய லீக் சுற்று கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மிகவும் விறுவிறுப்பாக நியூசிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. அதில் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வெற்றியுடன் தொடங்கிய போதிலும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் தோற்றது.

- Advertisement -

வாழ்வா – சாவா போட்டி:
அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 4வது லீக் போட்டியில் மீண்டும் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்வியடைந்த இந்தியா வங்கதேசத்துக்கு எதிரான 6-வது லீக் போட்டியில் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் கண்டிப்பாக வென்றே தீர வேண்டும் என்ற வாழ்வா – சாவா நிலைக்கு தள்ளப்பட்டது.

அப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கிய நியூசிலாந்தின் க்றிஸ்ட்சர்ச் நகரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில் 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட அரைசதம் அடித்த ஷபாலி வர்மா 53 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த யஸ்டிக்கா பாட்டியா 2 ரன்களில் ஏமாற்றினார். மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அடுத்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் உடன் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து 71 (84) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

- Advertisement -

த்ரில், பரபரப்பு:
அவருடன் பேட்டிங் செய்த கேப்டன் மிதாலி ராஜ் 68 (84) ரன்களில் ஆட்டமிழக்க கடைசி நேரத்தில் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 48 (57) ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த இந்தியா 274 ரன்கள் எடுத்தது. அதன்பின் 275 என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீராங்கனை லீ 6 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த லாரா வால்வ்ரட் மற்றும் கோடல் ஆகியோர் இந்தியாவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது சிறப்பாக பந்து வீசிய துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 80 ரன்கள் எடுத்திருந்த லாரா வால்வ்ட்ரட்டை அவுட் செய்து அடுத்து வந்த கேப்டன் லஸ்’சை 22 ரன்களில் ஆட்டமிழக்க வைத்து போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார்.

அதனால் 182/4 என தடுமாறிய தென்னாப்பிரிக்காவுக்கு டு ப்ரீஸ் மற்றும் மாரிஸன் காப் ஆகியோர் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் மாரிஸன் காப் 32 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாக அடுத்து வந்த ட்ரையான் 17 ரன்கள் செட்டி 7 ரன்கள் என 2 வீராங்கனைகளை அடுத்தடுத்து இந்தியா அவுட் செய்தது. இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து இந்தியாவிற்கு தொல்லை கொடுத்த டு ப்ரீஸ் கடைசி நேரத்தில் அரைசதம் அடித்ததால் போட்டியில் மிகப்பெரிய பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டது. குறிப்பாக கடைசி ஓவரில் தென்னாபிரிக்கா வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்ட போது அதை இந்தியா வீராங்கனை தீப்தி சர்மா வீசினார்.

- Advertisement -

இதயங்களை நொறுக்கிய நோ பால்:
அதில் முதல் பந்தை எதிர்கொண்ட திரிசா செட்டி 1 ரன் எடுத்து 2-வது பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்று 1 ரன் எடுத்தபின் ரன் அவுட்டானார். அதன்பின் 3 மற்றும் 4 ஆகிய பந்துகளில் தென்னாபிரிக்கா தலா 1 ரன் எடுத்தது. இதனால் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5-வது பந்தில் 52* ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு மிகப் பெரிய தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த டு ப்ரீஸ் அவுட்டானர். இதனால் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த வேளையில் அதை சோதித்த 3வது அம்பயர் அது நோ – பால் என அறிவித்ததால் பிரீ ஹிட் பெற்ற தென்ஆப்பிரிக்கா அடுத்த 2 பந்துகளில் 2 ரன்களை எடுத்து 50 ஓவர்களில் 275/7 ரன்களை பதிவு செய்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் 4-வது அணியாக தகுதி பெற்றது.

மறுபுறம் முக்கியமான கடைசிகட்ட நேரத்தில் சொதப்பிய இந்தியா வாழ்வா – சாவா என்ற இந்த முக்கியமான போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக இந்த உலக கோப்பையின் லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக கைமேல் கிடைத்த வெற்றி நோ-பால் காரணமாக எதிரணியிடம் சென்றதை பார்த்த பல கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயம் நொறுங்கி போனது என்றே கூறலாம்.

- Advertisement -

இதனால் முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் வெறும் கனவாகவே போனது. இந்த படு தோல்வியால் பல இந்திய முன்னாள் வீரர்கள் தங்களின் சோகத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக 2017-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய பவுலர் ஜஸ்பிரித் பும்ரா இதேபோல் நோபால் வீசி இந்தியாவின் வெற்றியை தாரை வார்த்தார்.

இதையும் படிங்க : சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தென்னிந்தியாவை கொச்சைப்படுத்திய ரோஹித், ரசிகர்கள் கோபம் – அப்படி என்ன கூறினார்?

அந்த வகையில் சமீப காலங்களாக இதுபோன்ற ஐசிசி தொடர்களில் நோ-பால் வீசிதன் காரணமாக இந்தியா வெற்றிகளை கோட்டைவிட்டு வருகிறது என வருத்தத்தை தெரிவித்த வீரேந்திர சேவாக் இதுபோன்ற வெற்றிகளை மீண்டும் பெறுவதற்கு நிறைய வருடங்கள் தேவைப்படும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Advertisement