IND vs NZ : பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் மழையால் வந்த டிவிஸ்ட் – போட்டியின் முடிவு மற்றும் தொடரை வென்றது யார்?

IND vs NZ
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த பின் நியூசிலாந்து பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்ற இந்தியா முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி நவம்பர் 22ஆம் தேதியன்று நேப்பியர் நகரில் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. மழையால் தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் 3 (4) ரன்னில் அவுட்டாகி சென்றார்.

INDvsNZ

அடுத்து வந்த மார்க் சாப்மேன் 12 (12) ரன்களில் ஆட்டமிழந்து சென்ற நிலையில் அடுத்த களமிறங்கிய கிளன் பிலிப்ஸ் உடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார். 6வது ஓவரில் இணைந்த இவர்கள் நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்களை குவித்து மிடில் ஓவர்களில் இந்திய பவுலர்களை பந்தாடி 3வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை வலுப்படுத்தினர். அதனால் 130/2 என்ற நல்ல நிலைமையில் இருந்த நியூசிலாந்து 200 ரன்களை நோக்கி பயணித்த நிலையில் அதிரடியாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 54 (33) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் முகமது சிராஜுடம் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அசத்திய மழை:

அடுத்த ஓவரிலேயே அர்ஷிதீப் சிங் வீசிய அடுத்த ஓவரில் மறுபுறம் அதிரடி காட்டிய டேவோன் கான்வே 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 59 (49) ரன்களில் ஆட்டமிழந்ததை பயன்படுத்திய இந்தியா டெத் ஓவர்களில் அனலாக செயல்பட்டு டார்ல் மிட்சேல் 10 (5), ஜிம்மி நீசம் 0 (3) என அடுத்து வந்த வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்தது. அதன் காரணமாக 200 ரன்களை தொட வேண்டிய நியூசிலாந்து 19.4 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் அர்ஷிதீப் ஆகியோர் தலா 4 விக்கெட்களை சாய்த்தனர்.

அதைத் தொடர்ந்து 161 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 10 (11) ரிஷப் பண்ட் 11 (5) என சொதப்பல் ஓப்பனிங் ஜோடி மீண்டும் சொற்ப ரன்களில் நடையை கட்டிய நிலையில் அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 21/3 என்ற தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் வழக்கம் போல 1 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியை துவங்கினாலும் 13 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் மறுபுறம் கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 30* (18) ரன்கள் எடுத்து அதிரடி காட்டியதால் 9 ஓவரில் 75/4 ரன்களை இந்தியா எடுத்த போது மழை வந்தது.

- Advertisement -

ஆச்சரியப்படும் வகையில் டிஎல்எஸ் விதிமுறைப்படி அந்த சமயத்தில் தேவையான இலக்கை இந்தியா கனக்கச்சிதமாக எட்டியிருந்ததால் மழை தொடர்ந்தால் போட்டி டையாகும் நிலை ஏற்பட்டது. அதனால் நிலைமை இந்தியாவுக்கு சாதகமாக மாறிய நிலையில் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழை சற்று நேரத்தில் விலகி சென்று போட்டியை நடத்த அனுமதித்தது. ஆனால் மைதானத்தில் அதிகப்படியான தண்ணீர் தேங்கியிருந்ததாலும் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. அதை மைதான பராமரிப்பாளர்கள் சரி செய்வதை நடுவர்கள் குடையுடன் சோதித்துக் கொண்டிருந்த நிலையில் போட்டி முடியும் நேரமும் வந்தது.

அதன் காரணமாக இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர். முன்னதாக ஏற்கனவே இத்தொடரின் முதல் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வென்றிருந்த இந்தியா 1 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக 2வது போட்டியில் சூரியகுமார் அதிரடியால் இந்தியா வென்ற நிலையில் இப்போட்டியில் அவர் முன்னதாகவே ஆட்டமிழந்த காரணத்தால் கடைசி நேரத்தில் பாண்டியா போராடினாலும் தோல்வியை சந்திக்க வாய்ப்பிருந்தது.

இருப்பினும் கடைசி நேரத்தில் ட்விஸ்ட் போல மழை வந்து இந்தியாவிற்கு கை கொடுத்தது என்றே கூறலாம். அத்துடன் சீனியர் நட்சத்திரங்கள் இல்லாத நிலைமையில் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து மீண்டெழுந்துள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி 2024 டி20 உலக கோப்பைக்கான புதிய பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

Advertisement