நாங்க எப்படி விளையாடனும்னு சொல்ல நீங்க ஆள் இல்ல – இந்தியாவுக்கு 2 ஜாம்பவான்கள் சுளீர் பதிலடி

Babar Azam Rohit Sharma IND vs PAK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் வரும் 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பங்கேற்க இந்தியா செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளது இரு நாட்டுக்குமிடையே பெரிய சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இவ்விரு நாடுகளும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. மறுபுறம் தங்களது நாட்டில் தடைப்பட்டு கிடந்த சர்வதேச கிரிக்கெட்டை கடுமையான போராட்டத்திற்குப் பின் மீண்டும்  நடத்தி வரும் பாகிஸ்தான் வாரியம் 2008க்குப்பின் 2வது முறையாக ஆசிய கோப்பையை அடுத்த வருடம் நடத்தும் உரிமையை போராடி வாங்கியுள்ளது.

Jay-shah

- Advertisement -

குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிய கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்றுக் கொண்ட கூட்டத்தில் தான் பாகிஸ்தானுக்கு ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை வழங்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் ஆசிய கவுன்சில் தலைவர் இப்படி பேசியுள்ளது ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் பாகிஸ்தான் வாரியம் அதே 2023இல் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்க தங்களது அணியும் வராது என்று அறிவித்துள்ளது.

நீங்க ஆள் இல்ல:
மேலும் ஆசிய கோப்பையை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று ஜெய் ஷா அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிராக இதர ஆசிய நாடுகளின் ஆதரவை பெறுவதற்கு அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பரபரப்பால் அக்டோபர் 23இல் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை புறக்கணித்து இந்தியாவுக்கு இப்போதே பதிலடி கொடுக்க வேண்டுமெனவும், ஜெய் ஷா’வுக்கு கிரிக்கெட் அனுபவமில்லை என்றும் அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் கொந்தளிக்கின்றனர்.

Younis

அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் பாகிஸ்தான் எவ்வாறு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை இந்தியா சொல்ல முடியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். இது பற்றி அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சியில் வக்கார் யூனிஸ் பேசியது பின்வருமாறு. “இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மிஸ்பா சொன்னது போல் அனேகமாக இந்த கருத்து மேலிடத்திலிருந்து (அரசியல்) வந்திருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அல்லது அந்நாட்டுக்கு பயணித்து கிரிக்கெட் விளையாடக் கூடாது என்ற எளிமையான பாலிசியை வைத்திருக்கிறார்கள்”

- Advertisement -

“அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டை உடைக்க நினைக்கிறார்கள் அவ்வளவுதான். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் வாரியம் வளைந்து கொடுக்காமல் பதிலடி கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தான் கிரிக்கெட்டை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் மேலும் நமது கண்ணியத்தையும் மரியாதையையும் நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில் அவர்களுடன் விளையாடுவதை விட நமக்கு கிரிக்கெட் முக்கியமானது. இது சம்பந்தமாக அடுத்த சில நாட்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார்.

Akram

அவரை விட பாகிஸ்தான் எப்படி விளையாட வேண்டும் என்ன விளையாட்டு வேண்டும் என்பதை சொல்வதற்கு நீங்கள் ஆளில்லை என்ற வகையில் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் காட்டத்துடன் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை இந்தியாவால் தீர்மானிக்க முடியாது. நான் அரசியல் வேறுபாடுகளுக்காக இருக்கிறேன் என்றாலும் இந்த சமயத்தில் அரசியல் முன்னணியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் கூற முடியாது. இருநாட்டு வாரியங்களும் ஒருவருக்கொருவர் பேச வேண்டும்”

- Advertisement -

“என்னை கேட்டால் இது பற்றி ஜெய் ஷா இதர நாட்டு வாரியங்களுடன் மீட்டிங் ஏற்பாடு செய்து அவர்களது கருத்தையும் கேட்டிருக்க வேண்டும். அதை விட ஆசிய கோப்பை கவுன்சில் தான் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கியது” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs PAK : ஒருவேளை போட்டி மழையால் ரத்தானால் என்னவாகும்? – ஐ.சி.சி கூறும் விதிமுறை என்ன?

இப்படி என்னதான் கொந்தளித்தாலும் ஐசிசியை விட பணக்கார வாரியமாக இருப்பதுடன் ஆசிய கவுன்சிலுக்கே நிதியை கொடுக்கும் இந்தியாவை உங்களால் எதிர்க்க முடியாது என்பதால் அவர்கள் சொல்வதைக் கேட்குமாறு ஆகாஷ் சோப்ரா, டேனிஷ் கனேரியா போன்ற முன்னாள் வீரர்கள் நிதர்சனத்தை பேசியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement