மீண்டும் சாதனை படைத்த மித்தாலி, கோஸ்வாமி! ஆனால் இந்தியா மீண்டும் தோல்வி – செமிபைனல் கஷ்டம்

Women's World Cup 2022
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று துவங்கிய இந்த உலக கோப்பையில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ICC Women's World Cup 2022

- Advertisement -

அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பரிதாப தோல்வி அடைந்த இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது போட்டியில் 155 ரன்கள் வித்யாசத்தில் மெகா வெற்றி பெற்று மீண்டெழுந்தது. இருப்பினும் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது போட்டியில் மீண்டும் படுதோல்வி அடைந்தது.

பலமான ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்தியா:
அந்த நிலையில் இந்த உலக கோப்பையில் தனது 5-வது லீக் போட்டியில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு பலம் பொருந்திய ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டது. ஆக்லாந்து நகரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 10 ரன்கள், ஷபாலி வர்மா 12 ரன்கள் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்கள்.

Women's World Cup 2022 Harmanpreet Kaur

இதனால் 28/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் யாஸ்டிகா பாட்டியா ஜோடி பொறுப்புடன் பேட்டிங் செய்து காப்பாற்றியது. 3-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் விளாசிய இந்த ஜோடியில் 6 பவுண்டரிகள் உட்பட அரைசதம் அடித்து 59 ரன்கள் எடுத்திருந்தபோது யாஸ்டிகா பாட்டியா ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய மிதாலி ராஜ் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 66 ரன்களில் அவுட்டானார். கடைசி நேரத்தில் பூஜா வஸ்திரக்கர் வெறும் 28 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உட்பட 34 ரன்களும் துணை கேப்டன் ஹர்மன்பிரீட் கவூர் 47 பந்துகளில் 6 பவுண்டரி உட்பட 57* ரன்களும் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 277/7 ரன்களை பதிவு செய்து அசத்தியது.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெற்றி:
ஆனால் இந்த 278 ரன்கள் இலக்கு என்பது பலம் பொருந்திய ஆஸ்திரேலியாவுக்கு சர்வ சாதாரணம் என்பதால் அந்த அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே அந்த அணியின் ஓப்பனிங் ஜோடி 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி 72 (65) ரன்கள், ஹைன்ஸ் 43 (53) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த கேப்டன் மெக் லென்னிங் 97 (103) ரன்கள் விளாசி ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிப் படுத்தினார். கடைசி நேரத்தில் எலிஸ் பெரி 28 ரன்களும் பெத் மூனி 30* ரன்களும் எடுத்ததால் 49.3 ஓவர்களில் 280/4 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Women's World Cup 2022

இதன் வாயிலாக மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை (278 ரன்கள்) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சாதனையையும் படைத்த ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. மறுபுறம் பேட்டிங்கில் அசத்திய போதிலும் பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா பரிதாப தோல்வி அடைந்தது. தற்போது வரை பங்கேற்ற 5 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளை பெற்ற இந்தியா 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

- Advertisement -

தற்போதைய நிலைமையில் அடுத்ததாக நடைபெறும் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான தனது கடைசி 2 லீக் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற வாழ்வா – சாவா நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

Women's World Cup 2022 IND vs PAK

1. முன்னதாக இப்போட்டியில் 68 ரன்கள் விளாசிய இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் உலக கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற நியூஸிலாந்தின் டெப்பி ஹாக்லியின் உலக சாதனையை சமன் செய்தார். இவர்கள் இருவருமே அதிகபட்சமாக 12 அரை சதங்கள் அடித்துள்ளார். இதில் 8 அரை சதங்களை மிதாலி ராஜ் ஒரு கேப்டனாக அடித்துள்ளார். இதன் வாயிலாக மகளிர் உலகக் கோப்பைகளில் அதிக அரை சதங்கள் அடித்த கேப்டன் என்ற உலக சாதனையை அவர் ஏற்கனவே படைத்துள்ளார்.

2. இந்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய நட்சத்திர வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 200 போட்டிகளில் விளையாடிய 2-வது வீராங்கனை என்ற மாபெரும் சாதனை படைத்தார். முதல் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் தற்போதைய கேப்டன் மிதாலி ராஜ் (230 போட்டிகள்) ஏற்கனவே படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement