ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 17ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் இலங்கை மற்றும் முன்னாள் சாம்பியன் இந்திய ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு குசால் பெரேரா முதல் ஓவரிலேயே பும்ரா வேகத்தில் டக் அவுட்டானார்.
அதை விட நிசாங்கா 2, சமரவிக்ரமா 0, அசலங்கா 0, டீ சில்வா 4, கேப்டன் சனாக்கா 0 என 4 முக்கிய பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கிய முகமது சிராஜ் மொத்த போட்டியையும் தலைகீழாக மாற்றினார். அவருடைய வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாத இலங்கை 15.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 50 ரன்கள் சுருண்டு மோசமான சாதனை படைத்தது.
சாதனை வெற்றி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 17 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பவுலராக சாதனை படைத்த முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 51 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 3 பவுண்டரியுடன் 23* (18) ரன்களும் சுப்மன் கில் 6 பவுண்டரியுடன் 27* (19) ரன்கள் எடுத்து 6.1 ஓவரிலேயே இலக்கை எட்ட வைத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று கொடுத்தனர்.
அதனால் நடப்பு சாம்பியன் இலங்கையை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்த இந்தியா 2023 ஆசிய கோப்பையை வென்று ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மேலும் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்ற இந்தியா இதையும் சேர்த்து ஆசிய கோப்பை வரலாற்றில் 8 கோப்பைகளை வென்று யாராலும் தொட முடியாத வெற்றிகரமான மாஸ் சாம்பியனாக சரித்திரம் படைத்துள்ளது.
ஏனெனில் 2வது இடத்தில் இலங்கை 6 கோப்பைகளை வென்றுள்ள நிலையில் 3வது இடத்தில் பாகிஸ்தான் 2 கோப்பைகளை வென்றுள்ளது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் இதுவரை ஆசிய கோப்பையை வென்றதில்லை. அத்துடன் இந்த போட்டியில் 263 பந்துகளை மீதம் வைத்து வென்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: IND vs SL : 5 டக் அவுட்.. 50க்கு ஆல் அவுட்.. இலங்கை மோசமான சாதனை.. 24 வருட வரலாற்று அவமானத்துக்கு பழிக்கு பழி தீர்த்த இந்தியா
அந்த வகையில் ஆசிய கண்டத்தின் தொட முடியாத வெற்றிகரமான ஆசிய அணியாக இந்தியா சரித்திரம் படைத்துள்ளது. மேலும் இதன் வாயிலாக சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் இந்தியா ஆசிய சாம்பியன் என்ற மிகப்பெரிய அந்தஸ்துடன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.