முதல் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய சிங்கப்பெண்கள் – சரித்திர வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

ind w
- Advertisement -

மகளிர் போட்டிகளுக்கான ஐசிசி உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டில் கோலாகலமாக துவங்கியது. வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று என 2 வகையான சுற்றுகளை கொண்ட இந்த உலக கோப்பையில் பைனல் உட்பட 31 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற உலகின் டாப் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ICC Women's World Cup 2022

- Advertisement -

மார்ச் 4ஆம் தேதி அன்று துவங்கிய இந்த உலக கோப்பையின் முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்துக்கு அதன் சொந்த மண்ணில் ஷாக் கொடுத்தது. இப்படி மிகுந்த பரபரப்புடன் துவங்கிய இந்த உலக கோப்பையில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்தியா தனது முதல் லீக் போட்டியில் இன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது.

இந்தியா – பாகிஸ்தான் :
நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மௌங்கனி நகரில் இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு இளம் வீராங்கனை ஷபாலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் 4/1 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவை மீட்டெடுக்கும் முயற்சியில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் இணைந்து போராடினார்கள்.

Women's World Cup 2022 IND vs PAK

2வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றிய இந்த ஜோடியில் தீப்தி சர்மா 40 (57) ரன்களில் அவுட்டாக அவருடன் சிறப்பாக பேட்டிங் செய்த ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து 52 (75) ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் 9 (36), துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 5 (14), ரிச்சா கோஸ் 1 (5) என முக்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டானதால் 114/6 என்ற மோசமான நிலையில் இந்தியா மீண்டும் தடுமாறியது.

- Advertisement -

தூக்கி நிறுத்திய பூஜா – ராணா:
அப்போது ஜோடி சேர்ந்த இளம் வீராங்கனைகள் ஸ்னே ராணா மற்றும் பூஜா வஸ்திரக்கர் ஆகியோர் “நாங்கள் இருக்கிறோம்” என்பது போல பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை விளாசினார்கள். விக்கெட் விழுந்த பயம் கொஞ்சமும் இன்றி தொடர்ந்து பட்டையை கிளப்பிய இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து இந்தியாவை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தது. இதில் அபாரமாக பேட்டிங் செய்த பூஜா வஸ்திரக்கர் 8 பவுண்டரிகள் உட்பட வெறும் 59 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Women's World Cup 2022 IND vs PAK

மறுபுறம் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த ஸ்னே ராணா 4 பவுண்டரிகள் உட்பட 48 பந்துகளில் 53* ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்து இந்தியாவிற்கு சூப்பர் பினிஷிங் கொடுத்தார். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 244/7 என்ற நல்ல ஸ்கோரை இந்தியா எட்டியது. இதையடுத்து 245 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு அதன் தொடக்க வீராங்கனை அமீன் 30 (64) ரன்கள் எடுத்த போதிலும் அடுத்து வந்த ஜாவேரியா கான் 11 (28), பீஷ்மா மஹ்ரூப் 15 (25), சோஹைல் 5 (4), நிடா தார் 4 (10) போன்ற வீராங்கனைகள் அனைவரும் இந்தியாவின் சூப்பரான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

- Advertisement -

இதனால் 70/5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு இதர வீராங்கனைகளும் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறியதால் 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ராஜேஸ்வரி கைக்வாட் 4 விக்கெட்டுகளும் ஜூலன் கோஸ்வாமி மற்றும் ஸ்னே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

IND-Womens

இந்தியா சரித்திர வெற்றி:
இதன் காரணமாக 107 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து இந்த ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்த வெற்றிக்கு வித்திட்ட பூஜா வஸ்திரக்கர் ஆட்டநாயகி விருதை வென்றார். மேலும் இந்த வெற்றியின் வாயிலாக 2 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்தியா இந்த உலக கோப்பையின் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

- Advertisement -

வரலாற்றில் இதுவரை பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி பங்கேற்ற 11 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றது. அதேபோல் இன்று உட்பட உலக கோப்பை வரலாற்றிலும் அந்த அணிக்கு எதிராக பங்கேற்ற 4 போட்டிகளிலும் ஒரு போட்டியில் கூட தோற்காத இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க : இந்த மேட்ச்ல இவரை ஏன் சேத்தாங்க? சுத்தமான வேஸ்ட் – ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான இந்தியவீரர்

மொத்தத்தில் மகளிர் ஒருநாள் மற்றும் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா இதுவரை ஒருமுறை கூட தோற்றதே கிடையாது என்ற சரித்திரம் ஒவ்வொரு இந்திய ரசிகர்கனையும் பெருமை அடையச் செய்யும் அம்சமாகும். இதையடுத்து இந்த உலக கோப்பையில் இந்தியா தனது 2-வது போட்டியில் வரும் மார்ச் 10ஆம் தேதியன்று நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

Advertisement