
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஜூன் 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 25வது போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் அமெரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்காவுக்கு முதல் பந்திலேயே ஜஹாங்கிரை கோல்டன் டக் அவுட்டாக்கிய அர்ஷ்தீப் சிங் அடுத்ததாக வந்த ஆண்ட்ரீஸ் கௌஸையும் அதே ஓவரில் 1 ரன்னில் காலி செய்தார். அதனால் 3/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அமெரிக்காவுக்கு அடுத்ததாக வந்த கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் நிதானமாக விளையாட முயற்சித்து 11 (22) ரன்னில் பாண்டியா வேகத்தில் நடையை கட்டினார்.
சூப்பர் 8இல் இந்தியா:
அதே போல எதிர்புறம் நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ஸ்டீபன் டைலர் 24 (30) ரன்கள் குவித்து அக்சர் படேல் சுழலில் போல்ட்டானார். அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாட முயற்சித்த நிதீஷ் குமார் 27, கோரி ஆண்டர்சன் 15 ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் ஹர்மீத் சிங் 10, வேன் ஷால்விக் 11* ரன்கள் 20 ஓவரில் அமெரிக்கா 110/8 மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4, ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 111 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். போதாகுறைக்கு அடுத்த ஒரு சில ஓவரில் மறுபுறம் தடுமாறிய கேப்டன் ரோஹித் சர்மாவும் 3 (6) ரன்கள் ஆட்டமிழந்தார்.
அதனால் 10/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணிக்கு 3வது இடத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட் 18 (20) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் ரசிகர்கள் கவலையடைந்த போது ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அதில் 23 ரன்களில் கொடுத்த கேட்சை அமெரிக்கா கோட்டை விட்டதை பயன்படுத்திய சூரியகுமார் அரை சதமடித்து 50* (49) ரன்கள் குவித்தார்.
அவருடன் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடிய துபே 31* (35) ரன்கள் அடித்ததால் 18.2 ஓவரில் 111/3 ரன்கள் இந்தியா போராடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா ஜூன் 24ஆம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. மறுபுறம் நேத்ராவல்கர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் அமெரிக்கா போராடி தோற்றது.
இதையும் படிங்க: அமெரிக்காவை 110க்கு சுருட்டிய இந்தியா.. வேறு எந்த பவுலரும் செய்யாத 2 தனித்துவ சாதனையை நிகழ்த்திய அர்ஷ்தீப்
அதனால் அந்த அணியின் ரன்ரேட் பாகிஸ்தானை விட குறைந்துள்ளது. அந்த வகையில் இப்போட்டியில் வென்று பாகிஸ்தான் அணிக்கு இந்தியா கை கொடுத்துள்ளது. அதனால் தன்னுடைய கடைசி போட்டியில் பெரிய வெற்றியைப் பெற்று அமெரிக்க அதனுடைய கடைசி போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.