ஆசிய கோப்பை 2022 : இலங்கையை அசால்ட்டாக ஊதி தள்ளிய இந்திய சிங்கப்பெண்கள் – முடி சூடா அரசியாக படைத்த அபார சாதனை இதோ

- Advertisement -

ஆசிய கண்டத்தின் கிரிக்கெட் சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற 15வது ஆசிய கோப்பையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இலங்கை கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த நிலையில் ஆசிய கண்டத்தின் மகளிர் சாம்பியனை தீர்மானிக்கும் மகளிர் ஆசிய கோப்பை கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று வங்கதேசத்தில் துவங்கியது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெற்ற இந்த தொடரில் ஏற்கனவே 6 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா, நடப்புச் சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, அமீரகம், மலேசியா உட்பட 7 அணிகள் கோப்பைக்காக மோதின.

அதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்பதன் அடிப்படையில் நடைபெற்று முடிந்த லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் நாக்-அவுட் சுற்றுகு தகுதி பெற்றன. இருப்பினும் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்த வங்கதேசம் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க முடியாமல் ஆரம்பத்திலேயே பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

மாபெரும் பைனல்:
அதை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி சுற்றில் தாய்லாந்தை 74 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியாவும் பாகிஸ்தானை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அந்த நிலையில் அக்டோபர் 15ஆம் தேதியன்று வங்கதேசத்தின் சைலெட் நகரில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த இலங்கை இந்தியாவின் நெருப்பான பந்து வீச்சில் ரன்களைக் குவிக்க திண்டாடியது.

அந்த அணியின் முதுகெலும்பாக கருதப்படும் கேப்டன் சமாரி அட்டப்பட்டு 6 (12) ரன்களில் ரன் அவுட்டாக மற்றொரு வீராங்கனை சஞ்சீவினியும் 2 (4) ரன்களில் ரன் அவுட்டானார். அதன்பின் மாதவி 1, டீ சில்வா 6, பெரேரா 0, திலாரி 1, ரணசிங்கே 13 என அடுத்து வந்த வீராங்கனைகள் ரேணுகா சிங் போன்ற இந்திய வீராங்கனைகளின் அனலான பந்து வீச்சில் வந்த வாக்கிலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அதனால் 20 ஓவர்களில் எவ்வளவோ போராடியும் ஆல்-அவுட்டை தவிர்த்த இலங்கை வெறும் 65/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

சாம்பியன் பயணம்:
அந்தளவுக்கு மிரட்டலாக பந்து வீசிய இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளையும் ராஜேஸ்வரி கைக்வாத் மற்றும் ஸ்னே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 66 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 5 (8) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்கஸ் 2 (4) ரன்களில் நடையை கட்டினார். ஆனால் இலங்கையின் பந்து வீச்சுக்கு அசராமல் மறுபுறம் வெளுத்து வாங்கிய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 6 பவுண்டரி 3 சிக்சருடன் 51* (25) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

அவருடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 11* (14) ரன்கள் எடுத்ததால் 8.3 ஓவர்களிலேயே 71/2 ரன்கள் எடுத்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. மறுபுறம் அழுத்தமான பைனலில் தரமான இந்தியாவின் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பேட்டிங்கில் மொத்தமாக சரிந்த இலங்கை முதல் ஆசிய கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இந்த வெற்றியால் 2022 மகளிர் ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது.

இந்த வெற்றிக்கு 3 ஓவரில் 1 மெய்டன் உட்பட வெறும் 5 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி துருப்பு சீட்டாக செயல்பட்ட ரேணுகா சிங் ஆட்டநாயகி விருதை வென்றார். மேலும் 13 விக்கெட்டுகளை எடுத்து ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனையாக சாதனை படைத்த தீப்தி சர்மா தொடர் நாயகி விருதை வென்றார்.

முன்னதாக கடந்த 2004 முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் 2004, 2005, 2006, 2008, 2012, 2016 ஆகிய முதல் 6 தொடர்களின் சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக வென்று சரித்திரம் படைத்த இந்தியா 2018இல் பைனல் வரை சென்று வங்கதேசத்திடம் தோற்றது. ஆனால் தற்போது மீண்டும் வென்றுள்ள இந்திய மகளிரணி 8 தொடர்களில் 7 கோப்பைகளை வென்று ஆசிய மகளிர் கிரிக்கெட்டின் முடிசூடா அரசியாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றிக்கு சச்சின் டெண்டுல்கர் முதல் பாண்டியா வரை ஏராளமான முன்னாள் இன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

Advertisement