ஆசிய கோப்பை ரிப்பீட்.. 5 டக் அவுட்.. இலங்கையை ஓடவிட்ட இந்தியா.. சரித்திர சாதனை வெற்றி

IND vs SL 23
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 2ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் இலங்கை எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் பவர் பிளே கடந்தும் 30 ஓவர்கள் வரை நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் கடந்து 2வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.

- Advertisement -

மிரட்டல் வெற்றி:
அதில் முதலாவதாக 100 ரன்கள் தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 92 ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவரிலேயே விராட் கோலியும் 11 பவுண்டரிகளுடன் 88 ரன்களில் அவுட்டாகி சென்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அவர்களைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவருடன் 4வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் 21 ரன்களில் அவுட்டானார்.

ஆனால் அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் மீண்டும் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்ற நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 3 பவுண்டரி 6 சிக்சருடன் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய பங்கிற்கு 35 (24) ரன்கள் எடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 357/8 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 358 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கைக்கு முதல் ஓவரின் முதல் பந்திலேயே பும்ரா வேகத்தில் துவக்க வீரர் நிசாங்கா கோல்டன் டக் அவுட்டாக்க அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே சிராஜ் வேகத்தில் மற்றொரு துவக்க வீரர் கருணரத்னேவும் கோல்டன் டக் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த சமரவிக்கிரமாவையும் டக் அவுட்டாகிய முகமது சிராஜ் கேப்டன் குசால் மெண்டிசையும் 1 ரன்னில் போல்டாக்கினார்.

அதனால் 3/4 என ஆரம்பத்திலேயே மோசமான துவக்கத்தை பெற்ற இலங்கையை அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் காப்பாற்ற போராடிய போதிலும் எதிர்ப்புறம் அசலங்கா 1, ஹேமந்தா 0 ரன்களில் ஷமி வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பினார்கள். இறுதியில் மேத்தியூஸ் 12, சமீரா 0, தீக்சனா 1, ரஜிதா 14, மதுசங்கா 5 ரன்கள் எடுத்த போதிலும் 19.4 ஓவரிலேயே இலங்கையை கிட்டதட்ட 2023 ஆசிய கோப்பை ஃபைனல் போல 55 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று செமி ஃபைனலுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 48 ஆண்டுகால உலககோப்பை வரலாற்றில் முதல் இந்திய பவுலராக ஜஸ்ப்ரீத் பும்ரா படைத்த இமாலய சாதனை – விவரம் இதோ

அத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா அதிக ரன்கள் (302) வித்தியாசத்தில் தங்களது பெரிய வெற்றியை பதிவு செய்து மாபெரும் சரித்திர சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றதே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த தோல்வியால் இலங்கை இத்தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறியது.

Advertisement