நாக் அவுட்டில் 32/4.. வெறும் 2 விக்கெட்.. உடைந்த தெ.ஆ.. தூக்கிய குட்டி சச்சின்.. இந்தியா ஃபைனல் சென்றது எப்படி?

IND vs RSA U19
- Advertisement -

வருங்கால தரமான வீரர்களை அடையாளப்படுத்தும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று. அதில் உதய் சஹரன் தலைமையில் விளையாடி வரும் நடப்பு சாம்பியன் இந்தியா லீக் சுற்றில் வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளை தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து நடந்த சூப்பர் 6 சுற்றில் நியூசிலாந்து மற்றும் நேபாளை தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

அந்த நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொண்டது. பேனோனி நகரில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் போராடி 244/7 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

த்ரில்லர் வெற்றி:
அதிகபட்சமாக லஹன்-டிரே பிரிட்டோரியஸ் 76, ரிச்சர்ட் செலீட்வேன் 64 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி 3, முஷீர் கான் 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 245 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முதல் பந்திலேயே ஆதர்ஷ் சிங் கோல்டன் டக் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் முஷீர் கான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். போதாக்குறைக்கு அர்சின் குல்கர்னி 12, பிரியான்சு மோலியா 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 32/4 என ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறியது.

அப்போது களமிறங்கிய கேப்டன் உதய் சகரன் மற்றும் சச்சின் தாஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி சரிவை சரி செய்ய போராடினர். 12வது ஓவரில் இணைந்த இவர்கள் நேரம் செல்ல செல்ல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு சவாலை கொடுத்து 5வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவை தூக்கி நிறுத்தினர். இருப்பினும் அதில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 96 (95) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அந்த நிலையில் வந்த ஆரவல்லி அவினாஷ் 10, முருகன் அபிஷேக் 0 ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய கேப்டன் உதய் 81 (124) ரன்கள் அடித்து ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்து ரன் அவுட்டானார். இறுதியில் எதிர்புறம் இருந்த ராஜ் லிம்பானி அதிரடியாக 1 பவுண்டரி 1 சிக்சருடன் 13* (5) ரன்கள் அடித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: 2 ஆவது டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் புள்ளிபட்டியலில் முன்னேற்றம் – இந்திய அணி எத்தனையாவது இடம் தெரியுமா?

அதனால் 48.5 ஓவரில் 248/8 ரன்கள் எடுத்த இந்தியா வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லர் வெற்றி பெற்று 2024 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. குறிப்பாக நடப்பு சாம்பியனாக திகழும் இந்தியா கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கான இறுதிப்படியை தொட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா ரன்கள் எடுக்காமல் மிடில் ஓவரில் சுமாராக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் நெஞ்சை உடைக்கும் தோல்வியை சந்தித்து வெளியேறியது.

Advertisement