IND vs NZ : பேட்டிங், பந்து வீச்சில் அனலை தெறிக்க விட்ட இந்தியா, நியூஸிலாந்தை சுருட்டி உலக சாதனை வெற்றி பெற்றது எப்படி

Umran Malik
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறிய இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியது. ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத நிலைமையில் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பி தோற்ற இந்தியா 2வது போட்டியில் கடினமான பிட்ச்சில் போராடி வென்று தொடரை சமன் செய்தது. அந்த நிலைமையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி பிப்ரவரி 1ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஹர்டிக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு இசான் கிசான் 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடியாக செயல்பட்டு 2வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரி 3 சிக்சருடன் 44 (22) ரன்கள் குவித்து அவுட்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 24 (13) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக நின்று வெளுத்து வாங்கிய சுப்மன் கில் அரை சதமடித்து மிரட்டினார்.

- Advertisement -

மெகா வெற்றி:
குறிப்பாக அடுத்து வந்த கேப்டன் பாண்டியாவுடன் இணைந்து 4வது விக்கட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் இந்தியாவை வலுப்படுத்தி சதத்தை நெருங்கினார். அப்போது பாண்டியா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 30 (17) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரராக சாதனை படைத்து 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் 126* (63) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் நியூசிலாந்தை புரட்டி எடுத்த இந்தியா 234/4 ரன்கள் குவித்து அசத்தியது.

அதை தொடர்ந்து 235 என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு பவர்பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனல் தெறிக்க பந்து வீசினார்கள். அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் பின் ஆலன் 3, டேவோன் கான்வே 1, மார்க் சாப்மேன் 0, கிளன் பிலிப்ஸ் 2 என முக்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி நியூசிலாந்தை கைவிட்டார்கள். அதனால் 7/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றியதால் 21/5 என மேலும் தடுமாறியது.

- Advertisement -

அந்த நிலையில் டார்ல் மிட்சேல் நங்கூரத்தை போட்டாலும் எதிர்ப்புறம் வந்த மிட்சேல் சாட்னர் போராடி 13 (13) ரன்களில் அவுட்டான போது வந்த இஷ் சோதி, லாக்கி பெர்குசன் ஆகிய டெயில் எண்டர்களை இந்திய பவுலர்கள் டக் அவுட்டாக்கினர். இறுதியில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 35 (25) ரன்கள் எடுத்து போராடிய டார்ல் மிட்சேல் அவுட்டானதால் 12.1 ஓவரிலேயே 66 ரன்களுக்கு நியூசிலாந்து சுருண்டது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டலாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும் உம்ரான் மாலிக், சிவம் மாவி மற்றும் அரஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் சாய்த்தனர்.

அதனால் 168 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முழு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. 168 ரன்கள் : இந்தியா – நியூசிலாந்துக்கு எதிராக அகமதாபாத், 2023*
2. 143 ரன்கள் : இந்தியா – அயர்லாந்துக்கு எதிராக டப்லின், 2018
3. 143 ரன்கள் : பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, கராச்சி, 2018
4. 137 ரன்கள் : இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, பெசட்ட்ரி, 2019

இதையும் படிங்கபெரிய இடத்து மாப்பிளை கேஎல் ராகுல் திருமணத்துக்கு தோனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் கொடுத்த பரிசுகள் – லிஸ்ட் இதோ

முன்னதாக கடந்த இலங்கை ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று உலக சாதனை படைத்தது. தற்போது டி20 கிரிக்கெட்டிலும் உலக சாதனை வெற்றி பெற்றுள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதையும் உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபித்து விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

Advertisement