INDvsNED : நெதர்லாந்து அணியை எதிர்பார்த்தது போலவே சுருட்டி வீசிய இந்திய அணி – எவ்வளவு வித்தியாசம் தெரியுமா?

IND vs NED Rohit Sharma Axar Patel KL Rahul
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தால் தோல்வியின் பிடியிலிருந்து மீண்டெழுந்து அசாத்தியமான வெற்றியை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 27ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தன்னுடைய 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே கேஎல் ராகுல் 9 (12) ரண்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 4 பவுண்டரி 3 சிக்சருடன் 53 (39) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் அடுத்ததாக களமிறங்கிய சூரியகுமாருடன் இணைந்த விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 3வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் மற்றுமொரு அரை சதமடித்து 62* (44) ரன்கள் குவித்தார். அவருடன் மிரட்டலாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரி 1 சிக்சருடன் தனது பங்கிற்கு 51* (25) ரன்கள் குவித்ததால் 20 ஓவர்களில் இந்தியா 179/2 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக க்ளாஸென் மற்றும் வன் மீக்ரன் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

- Advertisement -

அசத்திய இந்தியா:
அதை தொடர்ந்து 170 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் அதிரடியை காட்ட முடியாமல் திணறியதுடன் விக்கெட்டுகளையும் இழந்தது. குறிப்பாக தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 1 (9) ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த மேக்ஸ் ஓ’தாவுத் 16 (10) டீ லீடி 16 (23) அக்கர்மென் 17 (21) டாம் கூப்பர் 9 (12) கேப்டன் எட்வர்ட்ஸ் 5 (8) என முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

அதனால் கடைசி வரை அதிரடியை காட்ட முடியாத அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆல் அவுட்டாவதை தவிர்த்தாலும் வெறும் 123/9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்தளவுக்கு ஆரம்பம் முதலே துல்லியமாக பந்து வீசிய இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற 2 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்து சூப்பர் 12 சுற்றின் 2வது பிரிவின் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

இந்த போட்டியில் நெதர்லாந்து கத்துக் குட்டியாகவே இருந்தாலும் 200 ரன்களை அடிக்க முடியாத அளவுக்கு பந்து வீச்சில் இந்தியாவை 179 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அசத்தலாகவே செயல்பட்டது. ஆனால் அந்த அணிக்கு இந்த ரன்களே அதிகம் என்ற வகையில் பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட பவுலர்கள் தரமாக செயல்பட்டதால் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ள இந்தியா பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய உற்சாகத்துடன் நெதர்லாந்தையும் காலி செய்துள்ளது. இதனால் 15 வருடங்கள் கழித்து 2வது உலக கோப்பையை வெல்லும் லட்சியத்தில் இந்திய அணியினர் மேலும் புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement