132 ரன்ஸ்.. குட்டி சச்சின், சஹரன் சதத்தால் நேபாளை வீழ்த்திய இந்தியாவுடன்.. செமி ஃபைனலில் மோதும் அணி இதோ

IND vs NEP
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் வருங்கால ஹீரோக்களை அடையாளப்படுத்தும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை 2024 தொடர் தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் உதய் சஹரன் தலைமையில் களமிறங்கியுள்ள நடப்புச் சாம்பியன் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய லீக் சுற்றில் வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளை தோற்கடித்து சூப்பர் 6 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

அதை தொடர்ந்து நடைபெற்று வரும் முக்கியமான சூப்பர் 6 சுற்றின் முதல் போட்டியில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா இரண்டாவது போட்டியில் நேபாளை எதிர்கொண்டது. அப்போட்டி பிப்ரவரி இரண்டாம் தேதி ப்ளூம்போய்ண்டீன் நகரில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

செமி ஃபைனலில் இந்தியா:
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆதர்ஷ் சிங் 21, அர்ஷின் குல்கர்ணி 18, ப்ரியான்சு மோலியா 19 என டாப் 3 பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 62/3 என்ற சுமாரான துவக்கத்தை பெற்று தடுமாறிய இந்திய அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் உதய் சஹரன் மற்றும் சச்சின் தாஸ் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் 14வது ஓவரில் சேர்ந்த இந்த ஜோடி சிறப்பாக ரன்கள் குவித்து அரை சதம் கடந்து இந்தியாவை வலுப்படுத்தியது. நேரம் செல்ல செல்ல வேகமான ரன் குவிப்பில் ஈடுபட்டு 48 ஓவர்கள் வரை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 215 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. அதில் சச்சின் தாஸ் 11 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 116 (101) ரன்களும் உதய் சஹரன் 9 பவுண்டரியுடன் 100 (108) ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

அதனால் 50 ஓவர்களில் இந்தியா 297/5 ரன்கள் எடுத்த நிலையில் நேபாள் சார்பில் அதிகபட்சமாக குல்சன் ஜா 3 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 298 ரன்களை துரத்திய நேபாள் முடிந்தளவுக்கு போராடியும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவரில் 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் தேவ் கனல் 33 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: முதல்நாள் ஆட்டம் முடிந்ததும் அம்பயருடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்ட அஷ்வின் – என்ன நடந்தது?

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சௌமி பாண்டே 4 அர்சின் குல்கர்னி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் இந்தியா போலவே தென்னாப்பிரிக்காவும் தங்களுடைய சொந்த மண்ணில் தேவையான வெற்றிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே வரும் பிப்ரவரி 6 அல்லது 8 தேதிகளில் நடைபெறும் செமி ஃபைனல் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் இந்தியா எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது.

Advertisement