IND vs HK : சின்ன டீம்னு பாத்தா அவங்களும் டஃப் குடுத்துட்டாங்களே – வெற்றி பெற்றது எப்படி?

IND vs HK Hong Kong Chahal
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருக்கும் இந்தியா தனது 2வது லீக் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 2 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்கவிட்ட கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 21 (13) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் 2வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் கடந்த போட்டியில் கோல்டன் டக் அவுட்டானதால் இம்முறை மெதுவாக பேட்டிங் செய்து 2 சிக்சருடன் 36 (39) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 200 ரன்களை தொடும் முயற்சியில் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அவருடன் கடந்த போட்டியில் பொறுமையாக பேட்டிங் செய்த விராட் கோலி இம்முறை சற்று அதிரடியை அதிகப்படுத்தி 1 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் அடித்து 59* (44) ரன்களை குவித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அசத்தலாக செயல்பட்டார். ஆனால் மறுபுறம் ஹாங்காங் பவுலர்களுக்கு கருணை காட்டாமல் நாலாபுறமும் சுழன்றடித்த சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரிகளையும் 6 மெகா சிக்ஸர்களையும் பறக்க விட்டு அரைசதம் விளாசி 68* (26) ரன்களை 261.54 என்ற தெறிக்கவிடும் ஸ்டிரைக் ரேட்டில் குவித்து அபார பினிஷிங் கொடுத்தார்.

சூப்பர் பேட்டிங்:
கடைசி வரை அவுட்டாகாத இந்த ஜோடி 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 20 ஓவர்களில் இந்தியாவை 192/2 ரன்கள் குவிக்க உதவியது. சுமாராக பந்துவீசிய ஹாங்காங் சார்பில் சுக்லா மற்றும் கசான்பர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 193 என்ற கடினமான இலக்கை துரத்திய அந்த அணிக்கு தொடக்க வீரர் முர்த்தசா ஆரம்பத்திலேயே 2 பவுண்டரியுடன் 9 (9) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அந்த நிலைமையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கேப்டன் நிசாகத் கான் அவசரப்பட்டு கிரீசை விட்டு வெளியேறி ரவிந்திர ஜடேஜாவின் ராக்கெட் வேகத்தில் 10 (12) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார். அதனால் பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு 3வது இடத்தில் களமிறங்கி பொறுப்புடன் செயல்பட்ட பாபர் ஹயாத் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 41 (35) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே அவருடன் போராடிய மற்றொரு வீரர் கின்சிட் ஷா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 30 (28) ரன்களில் ஆட்டமிழந்தார்.

கலக்கிய ஹாங்காங்:
அப்படி ஆரம்பம் முதலே கட்டுக்கோப்பாக பந்துவீசிய இந்திய பவுலர்களின் பந்து வீச்சில் பெரிய ரன்களை எடுக்க முடியாத அந்த அணிக்கு கடைசி நேரத்தில் ஐசஸ் கான் 14 (13) ரன்களும் ஜீசன் அலி அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சருடன் 26* (17) ரன்களும் மெக்கெச்சின் 16* (8) ரன்களும் எடுத்து போராடிய போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 152/5 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் 40 ரன்கள் வித்யாசத்தில் அசத்தலான வெற்றியை சுவைத்த இந்தியா சார்பில் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா, ஆவேஷ் கான், அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றிக்கு 68 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்த நடப்புச் சாம்பியன் இந்தியா குரூப் ஏ பிரிவில் பங்கேற்ற 2 லீக் போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து ஆசிய கோப்பை 2022 தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் 193 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹாங்காங் கத்துக்குட்டி என்று சொல்ல முடியாத அளவுக்கு உலகத்தரம் வாயந்த இந்திய பந்துவீச்சுக்கு எதிராக முழுமையான 20 ஓவர்களையும் தாக்குப்பிடித்து மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து போராடி தோல்வியடைந்தது.

அதிலும் கடந்த போட்டியில் பாகிஸ்தானை 147 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா இம்முறை தங்களை ஆல் அவுட் செய்ய முடியாத அளவுக்கு ஹாங்காங் பாகிஸ்தானை விச அட்டகாசமாக செயல்பட்டது. ஒருவேளை 160 போன்ற இலக்கை இந்தியா நிர்ணயித்திருந்தால் நிச்சயம் அந்த அணி வென்றிருக்கும் என்றே கூறலாம். அந்த வகையில் மோசமாக தோற்காமல் போராடி தோற்ற ஹாங்காங்கை இந்திய ரசிகர்களே பாராட்டுகிறார்கள். மறுபுறம் அந்த அணியை குறைத்து எடைபோட்டு ஆரம்பம் முதலே அஜாக்கிரதையாக பந்துவீசிய இந்தியா பேட்டிங்கிலும் 200 ரன்களை தொடாமல் சூப்பர் 4 மற்றும் ஃபைனலுக்கு முன்பாக இந்த போட்டியில் ஒரு பாடத்தை கற்றுள்ளது.

Advertisement