
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியாவை மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வீழ்த்தியது. அந்த நிலையில் நான்காவது போட்டி ஜனவரி 31ஆம் தேதி நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் 1, திலக் வர்மா 0, கேப்டன் சூரியகுமார் யாதவ் 0 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தார்கள். அதே போல மறுபுறம் அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 29 (19) மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாட முயற்சித்த ரிங்கு சிங் 30 (26) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
அதனால் 79-5 என தடுமாறிய இந்திய அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். 6வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை தூக்கி நிறுத்தி அவர்களில் இருவருமே அரை சதமடித்து தலா 53 ரன்கள் குவித்தார்கள். அவர்களுடைய ஆட்டத்தால் தப்பிய இந்தியா 20 ஓவரில் 181-9 ரன்கள் குவித்தது
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சாகிப் மஹ்முத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக 182 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு 6 ஓவரில் 62 ரன்கள் ஓப்பனிங் ஃபார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த பென் டக்கெட்டை 39 (19) ரன்களில் அவுட்டாக்கிய ரவி பிஸ்னோய் அடுத்ததாக வந்த கேப்டன் பட்லரை 2 ரன்களில் அவுட்டாக்கினார்.
மறுபுறம் தடுமாற்றமாக விளையாடிய பிலிப்ஸ் சால்ட் 23 (21), அடுத்ததாக வந்த லியாம் லிவிங்ஸ்டன் 9 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் வெளுத்து வாங்கிய ஹரி ப்ரூக் அரை சதத்தை அடித்து இந்தியாவின் வெற்றிக்கு அச்சுறுத்தலை கொடுத்தார். அப்போது அவரை 51 (26) ரன்களில் காலி செய்த வருண் சக்கரவர்த்தி அடுத்து வந்த கார்ஸை டக் அவுட்டாக்கி திருப்புமுனையை உண்டாக்கினார்.
இறுதியில் ஜேமி ஓவர்டன் 10, அடில் ரசித் 10* ரன்கள் எடுத்தும் 19.4 ஓவரில் 166 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் செய்த இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துபேவுக்கு பதிலாக வந்த ஹர்ஷித் ராணா 3, ரவி பிஸ்னோய் 3, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இதையும் படிங்க: தல தல தான்.. அசைக்க முடியாத சாதனையை ஐ.பி.எல் வரலாற்றில் நிகழ்த்தியுள்ள தோனி – விவரம் இதோ
அதன் காரணமாக 3 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் காண்பித்துள்ளது. ஏனெனில் இதையும் சேர்த்து கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய 17 டி20 தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திக்காமல் அசத்தி வருகிறது. மேலும் கடந்த பத்து வருடங்களாக இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டி20 தொடரில் கூட தோற்காமல் இருக்கும் சாதனையையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டது.