காமன்வெல்த் கேம்ஸ் 2022 : பார்படாஸை அதிரவிட்ட சிங்கப்பெண் சாதனை, நாக்-அவுட் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றதன் முழுவிவரம்

Commonwealth Games IND vs Bar Womens Renuka SIngh
- Advertisement -

ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிகரான காமன்வெல்த் 2022 போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய வீரர் வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து வரும் நிலையில் கடந்த 1998க்குப்பின் 24 வருடங்கள் கழித்து மகளிர் கிரிக்கெட் 20 ஓவர் போட்டிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா தனது முதல் லீக் போட்டியில் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தாலும் பாகிஸ்தானுக்கு எதிரான வாழ்வா – சாவா என்ற 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த நிலைமையில் அரையிறுதிக்கு செல்ல தனது கடைசி போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற மற்றுமொரு வாழ்வா – சாவா போட்டியில் பார்படாஸ் அணியை இந்தியா எதிர்கொண்டது. இந்திய நேரப்படி ஆகஸ்ட் 3-ஆம் தேதியான நேற்று இரவு 10.30 மணிக்கு எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 5 (7) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலே அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

அசத்திய பேட்டிங்:
அதனால் 7/1 என்ற சுமாரான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றொரு தொடக்க வீரர் ஷபாலி வர்மா உடன் இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தார். பவர்பிளே ஓவர்களில் அதிரடியான பவுண்டரிகளுடன் வேகமாக ரன்களை சேர்த்த இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு முக்கியமான 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிந்த இந்தியாவை காப்பாற்றியது. அதில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (26) ரன்களை 165.38 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளாசிய ஷபாலி வர்மா ரன் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்த சில ஓவரில் தானியா பாட்டியா 6 (13) ரன்களில் ஏமாற்றினாலும் மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்த ஜெமிமா ரோட்ரிக்கஸ் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கடந்து 56* (46) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவருடன் கடைசி நேரத்தில் 2 பவுண்டரி 1 சிக்சரை வெளுத்து வாங்கிய தீப்தி சர்மா 34* (28) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 162/5 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அதிரவிட்ட ரேணுகா:
அதை தொடர்ந்து 163 ரன்களை எடுத்தால் தான் தாங்களும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் களமிறங்கிய பார்படாஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது எனக்கூறலாம். ஏனெனில் முதல் ஓவரிலேயே நட்சத்திர தொடக்க வீராங்கனை டோண்டினை டக் அவுட் செய்த இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை ரேணுகா சிங் 3-வது ஓவரில் கேப்டன் மேத்தியூஸை 9 (7) ரன்களில் காலி செய்தார்.

அதோடு நிறுத்தாத அவர் 5-வது ஓவரில் சியா நைட் 3 (12) சோனா நைட் 16 (20) என நங்கூரமாக பேட்டிங் செய்ய முயன்ற 2 முக்கிய வீராங்கனைகளின் ஸ்டம்ப்களை அடுத்தடுத்து தெறிக்க விட்டு பார்படாஸ் அணியின் கதையை முடித்தார். அதனால் 5 ஓவரில் 19/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்து வந்த வீராங்கனைகளும் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் வந்த வாக்கிலேயே திரும்பினார்கள். அதனால் எவ்வளவோ போராடியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 62/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

சிங்கப்பெண் சாதனை:
அதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இந்தியா பங்கேற்ற 3 லீக் சுற்றுப் போட்டிகளில் 2 வெற்றியையும் 1 தோல்வியின் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. அதன் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் களமிறங்கிய இந்திய மகளிரணி முதல் முயற்சியிலேயே அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி சுற்றில் இறுதிப் போட்டிக்குச் சென்று தங்கப் பதக்கத்தை வெல்வதற்காக இந்திய அணி போராட உள்ளது.

முன்னதாக இப்போட்டியில் பவர்பிளே ஓவர்களிலேயே பார்படாஸ் அணியின் கதையை முடித்த ரேணுகா சிங் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியிலும் இதேபோல் பவர்பிளே ஓவர்களில் 4 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டலாக பந்துவீசி வெற்றிக்காக போராடினார். ஆனால் இதர வீராங்கனைகள் கைவிட்டதால் அப்போட்டியில் இந்தியா போராடி தோற்றது.

இதையும் படிங்க: ஆசிய கோப்பைக்கு பின் உலககோப்பைக்கு முன் இந்தியாவின் 3 புதிய கிரிக்கெட் தொடர்கள் – பிசிசிஐ அறிவித்த அதிகாரபூர்வ அட்டவணை

இருப்பினும் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் மொத்தம் 9* விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் இந்த காமன்வெல்த் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனைகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். பவர்பிளே ஓவர்களில் பட்டாசாக பந்துவீசும் அவரின் திறமையை பார்த்து இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement