ஆசிய கோப்பைக்கு பின் உலககோப்பைக்கு முன் இந்தியாவின் 3 புதிய கிரிக்கெட் தொடர்கள் – பிசிசிஐ அறிவித்த அதிகாரபூர்வ அட்டவணை

IND
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் அசத்திய இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து சாதனையுடன் கோப்பையை வென்றது. அந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையில் இந்த டி20 தொடரிலும் அசத்தி வரும் இந்தியா வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்புகிறது.

அதன்பின் ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தலைநகர் ஹராரேயில் நடைபெறும் அந்த தொடரில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட அனைத்து சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு மீண்டும் ஷிகர் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது.

- Advertisement -

உலகக்கோப்பைக்கு முன்:
அதில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முதல்தர இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்றில் 15-ஆவது முறையாக நடைபெறும் இந்த ஆசிய கோப்பை இம்முறை துபாயில் 6 அணிகளுடன் நடைபெற உள்ளது. அதில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா தனது முதல் போட்டியில் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த வருட ஆசிய கோப்பை 20 ஓவர் தொடராக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் கால அட்டவணையின் படி ஆசிய கோப்பையை முடித்துக் கொண்டு நேராக டி20 உலக கோப்பையில் பங்கேற்பதாக இருந்தது. இருப்பினும் அதற்கிடையே 30 – 40 நாட்கள் இடைவெளி உள்ளதால் அந்த நாட்களில் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக 3 புதிய தொடர்களில் இந்தியா பங்கேற்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலியா தொடர்:
அதில் ஆசிய கோப்பை நிறைவடைந்ததும் 8 நாட்கள் இடைவெளிக்குப் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த வருடம் துபாயில் நடந்த உலகக் கோப்பையில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா முதல் முறையாக கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக திகழ்கிறது. எனவே வலுவான ஆஸ்திரேலியாவை உலகக்கோப்பையில் எதிர்கொள்வதற்கு முன்பாக இந்த தொடரில் எதிர்கொண்டால் இந்திய வீரர்கள் தயாராவதற்கு உதவியாக அமையும் என்று பிசிசிஐ கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான அட்டவணை இதோ:
முதல் டி20 : செப்டம்பர் 20, செவ்வாய்க்கிழமை, இரவு 7 மணி, மொஹாலி
2வது டி20 : செப்டம்பர் 23, வெள்ளிக்கிழமை, இரவு 7 மணி, நாக்பூர்
3வது டி20 : செப்டம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை, இரவு 7 மணி, ஹைதராபாத்

- Advertisement -

தென்ஆப்பிரிக்க தொடர்:
அதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா சொந்த மண்ணில் களமிறங்குகிறது. இதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் கடைசியாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடக்கிறது. கடைசியாக கடந்த ஜூலையில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இவ்விரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதி கொண்ட நிலையில் கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் 2 – 2 என்ற கணக்கில் கோப்பை பகிர்ந்து கொள்ளப்பட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

எனவே மீண்டும் இவ்விரு அணிகள் பலப்பரீட்சை நடத்தப்போகும் டி20 தொடருக்கான அட்டவணை இதோ:
முதல் டி20 : செப்டம்பர் 28, புதன்கிழமை, இரவு 7 மணி, திருவனந்தபுரம்
2வது டி20 : அக்டோபர் 2, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி, கௌகாத்தி
3வது டி20 : அக்டோபர் 4, செவ்வாய்க்கிழமை, இரவு 7 மணி, இந்தூர்

இவ்விரு அணிகள் மோதப்போகும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை:
முதல் ஒன்டே : அக்டோபர் 6, வியாழக்கிழமை, மதியம் 1.30 மணி, லக்னோ
2வது ஒன்டே : அக்டோபர் 9, மதியம் 1.30 மணி, ராஞ்சி
3வது ஒன்டே : அக்டோபர் 11, மதியம் 1.30 மணி, டெல்லி

Advertisement