IND vs BAN : கலங்கடித்த மழை, அப்செட் பண்ண நினைத்த வங்கப்புலிகளை ஓடவிட்ட இந்தியா – த்ரிலாக வென்றது எப்படி

Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்வியை பதிவு செய்ததால் அரை இறுதிக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த நிலையில் நவம்பர் 2ஆம் தேதியன்று புகழ் பெற்ற அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தன்னுடைய 4வது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே 2 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் இணைந்த மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 50 (32) ரன்கள் குவித்து 2வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அவுட்டானார். அப்போது களமிறங்கிய சூரியகுமார் யாதவ் தனது பங்கிற்கு அதிரடியாக 4 பவுண்டரியுடன் 30 (16) ரன்களில் அவுட்டானார். ஆனால் அந்த சமயத்தில் அதிரடியான பினிஷிங் கொடுக்க வேண்டிய ஹர்திக் பாண்டியா 5 (6) தினேஷ் கார்த்திக் 7 (5) அக்சர் படேல் 7 (6) என லோயர் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

- Advertisement -

காப்பாற்றிய விராட்:
இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற விராட் கோலி கடைசியில் அதிரடியாக விளையாடி 8 பவுண்டரி 1 சிக்சருடன் 64* (43) ரன்கள் எடுக்க இறுதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 13* (6) ரன்கள் குவித்ததால் 20 ஓவர்களில் இந்தியா 184/6 ரன்கள் சேர்த்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் முகமது 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 185 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு ஒருபுறம் சாண்டோ நிலைத்து நிற்க மறுபுறம் இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி பிரித்து மேய்ந்த லிட்டன் தாஸ் வெறும் 21 பந்துகளில் அரை சதமடித்து மிரட்டலை கொடுத்தார்.

அதனால் 7 ஓவரிலேயே அந்த அணி 66/0 என்ற அதிரடியான தொடக்கத்தை பெற்ற போது மழை வந்ததால் டிஎல்எஸ் முறைப்படி 17 ரன்கள் வங்கதேசம் முன்னிலை பெற்றதால் இந்திய ரசிகர்கள் கலக்கமடைந்தனர். சுமார் அரை மணி நேரம் பெயத மழை கருணை காட்டியதால் வங்கதேசம் 16 ஓவரில் 151 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 54 பந்துகளில் 84 ரன்களை துரத்துய வங்கதேசத்துக்கு 7 பவுண்டரி 3 சிக்சருடன் மிரட்டிக் கொண்டிருந்த லிட்டன் தாஸை 60 (27) ரன்களில் கேஎல் ராகுல் ரன் அவுட் செய்து திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதை பயன்படுத்திய இந்திய பவுலர்கள் சாண்டோ 21 (25) கேப்டன் சாகி சாகிப் அல் ஹசன் 13 (12) அபிஃப் ஹொசைன் 2 (5) யாசிர் அலி 1 (3) மொசாடிக் ஹொசைன் 6 (3) என முக்கிய வீரர்களை அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் அவுட்டாக்கி கம்பேக் கொடுத்தது. ஆனாலும் கடைசி நேரத்தில் நுருள் ஹொசைன் – தஸ்கின் அஹமத் அதிரடி காட்டியதால் கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அதை வீசிய அர்ஷிதீப் சிங் முதல் பந்தில் சிங்கிள் கொடுத்தாலும் 2வது பந்தில் நுருள் ஹொசைன் சிக்ஸர் அடித்து கதிகலங்க விட்டார். ஆனாலும் சுதாரித்த அர்ஷிதீப் அடுத்த பந்தில் ரன் கொடுக்காமல் 4வது பந்தில் 2 ரன் கொடுத்த நிலையில் 5வது பந்தில் மீண்டும் நுருள் ஹொசைன் பவுண்டரி பறக்க விட்டார்.

அதனால் கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டபோது அசத்திய அர்ஷிதீப் 1 ரன் மட்டுமே கொடுத்ததால் 16 ஓவர்களில் வங்கதேசம் 145/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் விதிமுறைப்படி திரில் வெற்றி பெற்ற இந்தியா 4 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்து குரூப் 2புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி அரையிறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இறுதியில் நுருள் ஹொசைன் 25* (14) ரன்களும் தஸ்கின் அஹமத் 12* (7) ரன்கள் எடுத்த போதிலும் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஸதீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற வைத்தனர்.

முன்னதாக இப்போட்டிக்கு முன்பாக இந்தியா உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது ஆனால் நாங்கள் அவர்களை தோற்கடித்து அப்செட் கொடுக்க வந்திருக்கிறோம் என்று வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் எச்சரித்திருந்தார். அதற்கேற்றார் போல் இப்போட்டியில் பவர்பிளே ஓவர்களில் லிட்டன் தாஸ் சரவெடியால் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வங்கதேசம் செயல்பட்டது. ஆனால் மழைக்குப்பின் மிரட்டலாக செயல்பட்ட இந்திய வீரர்கள் வாய்ச்சவடால் விட்ட வங்கப்புலிகளை ஓடவிட்டு தெறிக்கும் வெற்றியை பதிவு செய்து பதிலடி கொடுத்துள்ளனர்.

Advertisement