இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடி வரும் உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜூலை 12ஆம் தேதி நார்த்தம்டன் நகரில் நடைபெற்ற செமி ஃபைனலில் பிரட் லீ தலைமையிலான ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் மற்றும் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணிகள் மோதின.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அம்பத்தி ராயுடு 14 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த சுரேஷ் ரெய்னா 5 (3) ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடினார்.
ஃபைனலில் இந்தியா:
அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் யுவராஜ் சிங் இந்த தொடரில் முதல் முறையாக தன்னுடைய ஃபார்மை மீட்டெடுத்து அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் ராபின் உத்தப்பா அரை சதமடித்து 6 பவுண்டரி 4 சிக்சருடன் 65 (35) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த யூசுப் பதான் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார்.
அவருடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த யுவராஜ் சிங் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 59 (28) ரன்களை 210.71 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த இர்பான் பதான் தன்னுடைய சகோதரர் யூசுப் பதானுடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கினார். அந்த வகையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் இர்பான் பதான் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 50 (19) ரன்களை 263.16 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார்.
இறுதியில் யூசுப் பதான் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 51* (23) ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலிய சாம்பியன்ஸை பொளந்த இந்தியா 20 ஓவரில் 254/6 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் சார்பில் அதிகபட்சமாக பீட்டர் சிடில் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 255 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் போராடி 168/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணிக்கு ஷான் மார்ஸ் 2, ஆரோன் பின்ச் 16, பென் டங் 10, பெர்குசன் 23, டேனியல் கிறிஸ்டின் 18, பென் கட்டிங் 11 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் அதிகபட்சமாக டிம் பைன் 40*, கோல்ட்டர்-நைல் 30* ரன்கள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்தியா சார்பில் அதிகபட்சமாக தவால் குல்கர்ணி மற்றும் பவன் நெகி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதையும் படிங்க: கோபத்தில் நாளைக்கே ஸ்ரீசாந்த்தை.. வீட்டுக்கு அனுப்புங்கன்னு தோனி சொன்னாரு.. 2010 பின்னணியை பகிர்ந்த அஸ்வின்
குறிப்பாக 2011 உலகக் கோப்பை காலிறுதி போல இப்போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வென்று யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்தார். அதனால் 86 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன்ஸ் ஜூலை 13ஆம் தேதி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை இறுதிப்போட்டியில் சந்திக்கிறது. அப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.